மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா களக்காட்டூரில் விழிப்புணர்வு ஊர்வலம்
களக்காட்டூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவையொட்டி, களக்காட்டூரில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. காஞ்சி சங்கரமடத்தின் 42வது மடாதிபதி பிரம்மானந்தகனேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சித்திஸ்தலமான களக்காட்டூரில் உள்ளது அக்னீஸ்வரர் கோவில். காஞ்சிபுரத்தில் சோழர்களால் கட்டப்பட்ட முதல் கோவில் என வரலாற்று ஆய்வாளர்களால் அடையாளம் காட்டப்படுகிறது. இக்கோவில் முதலாம் ராஜராஜனின் வேண்டுகோளுக்கிணங்க, இவ்வூர் வெண்ணெய்ப் புத்துாருடையான் கடன் மைந்தன் என்பவர், உலக நன்மைக்காக இரண்டு விளக்கெரிக்க சாவாமூவா போராட்டையும் நிலத்தையும் தானமாக செய்த வரலாற்றை குறிப்பிடும் கல்வெட்டு இடம்பெற்றுள்ளது. அதன் வரலாற்றை உணர்த்தவும், இதுபோன்ற எண்ணற்ற திருக்கோவில் பணிகள் தொடர்ந்து பராமரிக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாமன்னன் ராஜராஜசோழனுக்கு, அவர் பிறந்த நட்சத்திர விழாவான சதய விழாவையொட்டி, களக்காட்டூர் கிராமத்தில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. காஞ்சிபுரம் தாசில்தார் ரபீக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மத்திய தொல்லியல் துறை துணை கல்வெட்டு ஆய்வாளர் பி.டி.நாகராஜன், களக்காட்டூர் அக்னீஸ்வரர் கோவில் தொண்டர் ராஜேந்திரன் முன்னிலையில், காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன், சதய விழா விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். விழாவில் தொண்டை மண்டல வரலாற்று ஆய்வு சங்க நிறுவனர் ரூத் ராதா பாலன், தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் காஞ்சிபுரம் மாவட்ட செயலர் சதீஷ், சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவ - மாணவியர், பேராசிரியர், களக்காட்டூர் கிராமத்தினர் விழாவில் பங்கேற்றனர்.