மதுார் மலையில் பாறை கற்கள் உடைத்து திருட்டு
மதுார்:மதுார் மலையில் பாறை கற்கள் திருட்டுத்தனமாக உடைத்து கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வசிப்போர் வலியுறுத்தி உள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது மதுார் கிராமம். இக்கிராமத்தின் மலை மீது பாறை கற்கள் அதிகம் உள்ளன. இந்நிலையில், மலை மற்றும் மலையடி வாரத்தில் உள்ள இந்த பாறை கற்களை மர்ம நபர்கள் சிலர் கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் வகையில் உடைத்தெடுத்து திருட்டு தனமாக கடத்துவதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து, அப்பகுதியில் வசிப்போர் கூறியதாவது, மதுார் மலையின் பூமிக்கடியிலும், மேற்புறத்திலும் கருங்கற்களான பாறைகள் அதிகம் உள்ளன. இந்த பாறைகளை மர்ம நபர்கள் சிலர் இரவு மற்றும் பகல் நேரங்களிலும், திருட்டுத்தனமாக உடைத்து கற்களாக லாரிகள் மூலம் ஏற்றிச் செல்கின்றனர். ஏரிக்கரை, குளக்கரை மற்றும் கோவில் கட்டடம் உள்ளிட்ட கட்டுமான பயன்பாட்டிற்காக இந்த கற்களை விற்பனை செய்வ தாக கூறப்படுகிறது. தனி நபர்கள் வருமானத்திற்காக மதுார் மலையில் கனிமங்கள் கொள்ளை போவதை தடுக்க சம்பந்தப்பட்டத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறினர்.