உத்திரமேரூரில் நான்கு வீடுகளில் திருட்டு
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, சோமநாதபுரம் பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவர் முனியம்மாள், 72. வீட்டில் தனியாக வசித்து வரும் இவர், நேற்று முன்தினம் தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்றார். பின், மீண்டும் நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டார்.வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 1 சவரன் தங்க செயின் மற்றும் 50,000 ரொக்கம் திருடப்பட்டிருந்தது.இதேபோல, அதே பகுதியில் உள்ள முத்துராமபிள்ளை தெருவில் வசித்து வருபவர் ருக்மணி, 55. இவர் நேற்று காலை, சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து திரும்பியபோது, வீட்டுக்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்து 5 சவரன் தங்க நகை மற்றும் 5,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.பின், ருக்மணி வீட்டின் அருகே வசித்து வரும் நீலாவதி, 75, என்பவர், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே படுத்திருந்தார். பின், காலை அவரது வீட்டுக் கதவும் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 5,000 ரூபாய் ரொக்கம், 2 பட்டுபுடவைகள், 4 குத்து விளக்குகள் ஆகியவை திருடப்பட்டிருந்தது.தொடர்ந்து, அதே தெருவில் வசித்து வந்த கெங்கன், 52, என்பவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனம் திருடப்பட்டிருந்தது.உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். பூட்டிய வீடுகளில் திருடும் சம்பவம் உத்திரமேரூரில் தொடர்ந்து நடந்து வருவதால் பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.