மேல்பாக்கம் வழியே பேருந்து சேவை துவக்கம்
உத்திரமேரூர்: காரணிமண்டபத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு, மேல்பாக்கம் வழியே புதிய பேருந்து சேவை நேற்று துவங்கியது. உத்திரமேரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு உட்பட்டது, தடம் எண்.34ஏ பேருந்து. இப்பேருந்து, காரணிமண்டபத்தில் இருந்து களியாம்பூண்டி, அனுமந்தண்டலம் வழியாக காஞ்சிபுரத்திற்கு, தினமும் நான்கு நடை இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தினமும் 2 கி.மீ., துாரம் நடந்து, அனுமந்தண்டலம் சென்று பேருந்து பிடித்து, பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர். எனவே, காரணிமண்டபம் பேருந்தை, மேல்பாக்கம் வழியாக இயக்க அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, காரணிமண்டபம் பேருந்தை, மேல்பாக்கம் வழியாக இயக்கும் நிகழ்ச்சி, ஊராட்சி தலைவர் அஞ்சலை தலைமையில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மண்டல வணிக மேலாளர் ஸ்ரீதர், உத்திரமேரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் நாராயணன் முன்னிலை வகித்தனர். உத்திரமேரூர் தி.மு.க., - - எம்.எல்.ஏ., சுந்தர் கொடியசைத்து பேருந்து சேவையை துவக்கி வைத்தார். இதில், ஒன்றிய தி.மு.க., செயலர் ஞானசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.