டிஜிட்டல் முறையில் பயிர் கணக்கீடு நாளைக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி கணக்கீடு பணியை, தனியார் ஒப்பந்த பணியாளர் நிறுவனம் மூலம் தேர்வு செய்ய, நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி கணக்கிடு பணி, 2024ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பயிர் கணக்கீடு விவசாயிகளின் விளை நிலங்களில் பயிர், சர்வே எண், உட்பிரிவு, பாசன முறை உள்ளிட்ட விபரங்களை, புகைப்படத்துடன் கூடிய செயலி மூலம் இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 3 முறை டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி கணக்கீடு செய்யப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டு குறுவை, ரபி மற்றும் கோடைப்பருவத்துக்கு டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி கணக்கீடு பணி, ஒப்பந்த பணியாளர் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. மாவட்ட அளவிலான தேர்வுக்குழு மூலம் வரையறுக்கப்பட்ட விதிகளின்படி ஒப்பந்த பணியாளர் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. விருப்பமுள்ள நிறுவனங்கள் விரிவான விபரங்களுடன் பங்கேற்கலாம். ஒப்பந்த நிறுவனம் அந்தந்த கிராமங்களில் உள்ள படித்த இளைஞர்களை தேர்வு செய்ய வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 519 கிராமங்களில் 1,35,464 சர்வே எண்கள் உள்ளன. ஒரு சர்வே எண்ணுக்கு 20 ரூபாய் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவன பணியாளர்கள் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பணியை துவங்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், நாளைக்குள் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். இதில் 519 வருவாய் கிராமங்களுக்கும், ஒரு வருவாய் கிராமத்துக்கு, ஒரு நபர் வீதம், 519 பணியாளர்களை தேர்ந்தெடுத்து, பட்டியல் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.