கட்டியாம்பந்தலில் சர்ச் கட்டுவதால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை அபாயம்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, கட்டியாம்பந்தல் கிராமத்தில், அனுமதி இல்லாமல் புதிதாக சர்ச் கட்டப்படுவதாக, கடந்த சில மாதங்களாகவே இக்கிராம வாசிகள் புகார் தெரிவித்து வந்தனர். சர்ச் கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என, கிராமத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ ரம்யா என்பவர் வருவாய் துறைக்கு ஏற்கனவே புகார் அளித்துள்ளார்.ஆனால், கட்டுமான பணிகள் எதுவும் நிறுத்தப்படவில்லை. இந்த புகார் கிராமத்தினரிடையே தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தியதால், உத்திரமேரூர் தாசில்தார், கட்டியாம்பந்தல் கிராமத்தில் நேரடியாக களவிசாரணை செய்து, காஞ்சிபுரம் கலெக்டருக்கு அறிக்கை அளித்துள்ளார்.இந்நிலையில், சர்ச் கட்டுமான பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து, திறக்கப்படும் சூழல் உருவாகி உள்ளதால், அனுமதி இல்லாமல் சர்ச் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கட்டடத்திற்கு, 'சீல்' வைக்க வேண்டும் எனவும், ஜெயஸ்ரீ ரம்யா மற்றும் கிராமத்தினர் சிலர், தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு, சர்ச் தொடர்பான புகார்களை வலியுறுத்தினர்.உத்திரமேரூர் போலீசார் தாலுகா அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டவர்களை சமாதானப்படுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக வருவாய் துறையினர், கிராமவாசிகள் அனுப்பி வைத்தனர். இதனால், தாலுகா அலுவலகம் அருகே பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம்
கட்டியாம்பந்தல் கிராமவாசிகள் அளித்த புகாரின் மீது, உத்திரமேரூர் தாசில்தார் தேன்மொழி விசாரணை செய்துள்ளார். விசாரணையில், சர்ச் கட்டிய இடம், கிராம நத்தம் என, கட்டியாம்பந்தல் கிராம கணக்கில் பதிவாகி உள்ளது. இந்த இடம் முதலில் சாந்தி என்பவரிடமிருந்து, அஞ்சலை என்பவர் வாங்கியுள்ளார். அவரிமிருந்து, சென்னையை சேர்ந்த சுவிசேஷம் என்பவர் பெற்றுள்ளார். அந்த இடத்தில் சர்ச் கட்டப்பட்டுள்ளது. ஜெயஸ்ரீ ரம்யா அளித்த புகாரின்படி, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாய நிலை உள்ளதால், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என, சுவிசேஷம் என்பவருக்கு தாசில்தார் தேன்மொழி கடிதம் அனுப்பியுள்ளார்.