காஞ்சியில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரயில்வே துறைக்கு நுகர்வோர் சங்கம் மனு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்திலிருந்து, தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கக்கோரி, நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வழக்கறிஞர் பெர்ரி, ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.மனு விபரம்:காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில் சுவாமி தரிசனம் செய்யவும், பட்டு சேலை எடுக்கவும், நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர்.ஆனால், காஞ்சிபுரத்திற்கு வருவதற்கு நேரிடையாக தினசரி ரயில் சேவை இல்லாததால். எழும்பூர், சென்ட்ரல், அரக்கோணம் வரை ரயிலில் பயணித்து மாற்று போக்குவரத்து மூலம் காஞ்சிபுரம் வருகின்றனர். இதனால், பண விரயமும். நேர விரயமும் ஏற்படுகிறுது.அதேபோல, காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள சிப்காட்டில் பணிபுரிவோரும், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல காஞ்சியில் இருந்து நேரிடையாக தினசரி ரயில் சேவை இல்லை, இதனால், அரக்கோணம். செங்கல்பட்டு, சென்னை சென்று அங்கிருந்து ரயில்கள் மூலம் செல்ல வேண்டியுள்ளது.எனவே, கோவில் நகரமான காஞ்சியில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல, காஞ்சி எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும்.மேலும், காஞ்சியில் இருந்து, பெங்களூரு, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு தினசரி ரயில் இயக்குவதால், அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருப்பதோடு. ரயில்வேக்கு நல்ல வருவாயும் கிடைக்கும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.