உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் தொடர் மழை எதிரொலி நிலத்தடி நீர்மட்டம் 3 அடி உயர்வு

காஞ்சியில் தொடர் மழை எதிரொலி நிலத்தடி நீர்மட்டம் 3 அடி உயர்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், 3 அடிக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகளும், ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் 380 ஏரிகளும் உள்ளன. நுாற்றுக்கணக்கான குட்டையும், குளங்களும் உள்ளன. மேலும், பாலாறு, செய்யாறு, வேகவதி என, மூன்று ஆறுகள் பாய்கின்றன. இவ்வாறு ஏராளமான நீர்நிலைகள் இருந்தும், மாவட்டத்தின் பல இடங்களில் குடிநீருக்கு சிக்கல் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் போன்ற மாதங்களில் நிலத்தடி நீர் குறைவதும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதும் வழக்கம். அதுபோல, நடப்பாண்டிலும் ஆகஸ்ட் மாதம் வரை குறைந்த நிலத்தடி நீர்மட்டம், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிகரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முழுதும் பெய்ததால், பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை, 29.4 செ.மீ., இயல்பாக மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், 12 சதவீதம் கூடுதலாக, 32.8 செ.மீ., மழை பொழிந்துள்ளது. இதன் எதிரொலியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த செப்டம்பர் மாதத்தில், 13.4 ஆக இருந்த நிலத்தடி நீர்மட்டம், 2 அடி உயர்ந்து, 11.4 ஆக பதிவாகி உள்ளது. அக்டோபரில், 11.4 அடியாக இருந்த நிலத்தடி நீர்மட்டம், மேலும் 1 அடி உயர்ந்து, 10.2 அடியாக பதிவாகியுள்ளது. தொடர் மழை காரணமாக, இரண்டு மாதங்களில் 3 அடி உயர்ந்திருப்பது, விவசாயிகளுக்கான பாசனத்திற்கும், குடிநீருக்கும் உதவியாக இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை