தொடர் மழையால் நெசவு பணிகள் முடக்கம் காஞ்சி நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
காஞ்சிபுரம்: தொடர் மழையால் நெசவு பணிகள் முடங்கியதால், வருவாய் இன்றி காஞ்சிபுரம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், 22 பட்டு கைத்தறி சங்கங்களும், 50 பருத்தி கைத்தறி சங்கங்களும் இயங்குகின்றன. சங்கங்களில், 36,000 நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், 4,500 நெசவாளர்கள் தனியாகவும் செயல்பட்டு வருகின்றனர். சாயமிடும் தொழில் செய்பவர்கள், பட்டு, சரிகை, மூலப்பொருட்கள் விற்பனையாளர்கள், பட்டு சேலை விற்பனையாளர்கள் என, 40,000 பேர் நெசவுத் தொழிலை நம்பியுள்ளனர். வடகிழக்கு பருவ மழையால், தமிழகம் முழுதும் மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரத்தில் தொடர்ந்து மழை பெய்ததால், நெசவு தொழில் பாதிக்கப் பட்டுள்ளது. ஜாக்காட் பெட்டிகள், சேலை சுற்றப்பட்டுள்ள மரத்துண்டு என பல உபகரணங்கள் மரத்தால் செய்யப்பட்டது. இவை, ஈரப்பதம் காரணமாக, நெசவுத் தொழிலுக்கு ஒத்துழைப்பதில்லை. மழையால் ஜாக்காட் பெட்டியில் உள்ள டிசைன், அச்சில் சரியாக பதிவதில்லை. மேலும், நெசவாளர் களின் வீடுகள் தாழ்வாக உள்ளதால், தறியின் குழிகளில் மழைநீர் புகுந்ததாலும் நெசவு தொழில் முடங்கியுள்ளது. இதனால், வருவாய் இழப்பு ஏற்பட்டு, நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நெசவாளர்கள் கூறியதாவது: நாள் முழுதும் பணியில் ஈடுபட்டால், அதிகபட்சம் 500 ரூபாய்தான் கூலி கிடைக்கும். பட்டு, சரிகை போன்ற மூலப்பொருட்கள் விற்பனையும் மழையால் குறைந்துள்ளது. சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்வதால், நெசவு உபகரணங்கள் ஒத்துழைப்பின்றி பணிகள் முடங்கியுள்ளன. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், நெசவாளர்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். பட்டு வியாபாரிகள் கூறுகையில், 'மழையால் உற்பத்தி மட்டுமல்ல, பட்டு சேலை வியாபாராமும் முடங்கிவிட்டது. ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வருவோரின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது' என்றனர்.