தாயுடன் பேச அனுமதிக்காததால் ஆத்திரம் ரயில் கம்பியில் முட்டிய குற்றவாளி காயம்
தாம்பரம், சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் என்கிற குள்ள சந்தோஷ், 24. மதுராந்தகத்தில் வீடு புகுந்து திருடிய வழக்கில், அவர் செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இதற்கிடையில் வழிப்பறி வழக்கில், சந்தோஷ்குமாரை தேடிவந்த தாம்பரம் போலீசாருக்கு, அவர் திருட்டு வழக்கில் சிறையில் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து, அவ்வழக்கு தொடர்பாக சந்தோஷ்குமாரை ஆஜர்படுத்த, நேற்று காலை, ஆயுதப்படை போலீசார் மின்சார ரயிலில், தாம்பரத்திற்கு அழைத்து வந்தனர்.இதற்கிடையில், மகனை பார்க்க செங்கல்பட்டிற்கு சென்ற சந்தோஷ்குமாரின் தாய், மகனை தாம்பரம் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதை அறிந்து, அதே ரயிலில், மகன் இருந்த பெட்டியில் பயணம் செய்தார்.அப்போது, வழியில், தாயும், மகனும் சண்டை போட்டுக்கொண்டே வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மதியம் 12:30 மணிக்கு, தாம்பரம் சானடோரியம் வந்ததும், சந்தோஷ்குமார் தாயுடன் பேச முயன்றார்.அதற்கு போலீசார் அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், ரயியல் இருக்கை கம்பியில் முட்டிக்கொண்டார்.அதில், தலையில் காயமடைந்து ரத்தம் கொட்டியதை அடுத்து, அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவருக்கு ஒரு தையல் போடப்பட்டது. தொடர்ந்து, அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின் செங்கல்பட்டு சிறைக்கு அழைத்து சென்றனர்.