காஞ்சிபுரம் மேயர் அழுத்தத்தால் மாநகராட்சி கமிஷனர் மாற்றம்
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சியில் மேயர் மகாலட்சுமி அழுத்தம் காரணமாக, கமிஷனர் நவேந்திரன், சேலம் மாநகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனராக இருந்த நவேந்திரன், பொறுப்பேற்ற சமயத்தில் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், மேயர் மகாலட்சுமி உள்ளிட்டோரிடம் இணக்கமாக இருந்தார். மாநகராட்சி கூட்டத்தையும், அங்கு நடப்பதையும் சமாளித்து வந்தார். சமீப காலமாக, மேயர் மகாலட்சுமி மற்றும் தி.மு.க., கவுன்சிலர்களிடையே, அவருக்கு ஏற்பட்ட பனிப்போர் காரணமாக இணக்கமில்லாத சூழல் இருந்தது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தை சீரமைப்பது தொடர்பாக, ஒப்பந்ததாரர் சுடர்மணி என்பவருக்கு, மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன் முறைகேடாக ஒப்பந்தம் அளித்ததாக, தி.மு.க., கவுன்சிலர் சுரேஷ் குற்றம் சாட்டினார். இது கவுன்சிலர்கள் இடையே பெரும் பிரச்னையாக வெடித்தது. மேயரும், தன் அனுமதியின்றி கமிஷனர் ஒப்பந்தம் விட்டதற்கு அதிருப்தி தெரிவித்து, கட்சி மேலிடத்திலும், இச்சம்பவம் குறித்து புகார் தெரிவித்திருந்தார். பதிலுக்கு, கவுன்சிலர் சுரேஷ் நடத்திவரும் டிவி கேபிள் சேவைக்கு வரி பாக்கி வைத்துள்ளதாக கூறி, கமிஷனர் அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பினார். இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வந்ததால், சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்திலும், கமிஷனர் நவேந்திரன் பங்கேற்கவில்லை. இதனால் மேயர் மகாலட்சுமி, கமிஷனர் மீதான அதிருப்தியால், அவரை இடமாற்ற வேண்டும் என, எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர் மூலம் அழுத்தம் கொடுத்து வந்தார். இந்நிலையில், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் கார்த்திகேயன், கமிஷனர் நவேந்திரனை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். நவேந்திரன், சேலம் மாநகராட்சியின் துணை கமிஷனராகவும், சேலம் மாநகராட்சியின் துணை கமிஷனர் பாலசுப்ரமணியம், காஞ்சிபுரம் மாநகராட்சியின் புதிய கமிஷனராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.