உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் தொழில் உரிமம் பெறாதோர் 2,000 பேர் கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி முடிவு

காஞ்சியில் தொழில் உரிமம் பெறாதோர் 2,000 பேர் கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி முடிவு

காஞ்சிபுரம்:தொழில் உரிமம் பெற புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில், 2,000க்கும் அதிகமானோர் தொழில் உரிமம் கூட இல்லாமல், கடை நடத்துகின்றனர். உரிமம் பெறாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில், தியேட்டர், ரைஸ்மில், ஜவுளிக்கடை, மளிகை கடை, சூப்பர் மார்க்கெட், இயந்திரங்களை கொண்டு பெரிய அளவில் மேற்கொள்ளும் தொழிற்சாலைகள் போன்றவைக்கு, அதன் உரிமையாளர்கள், தொழில் உரிமம் பெற வேண்டிய கட்டாயம் கடந்தாண்டு வரை இருந்தது.உள்ளாட்சி சட்ட விதிகளில் மேற்கொண்ட மாற்றம் காரணமாக, பெட்டி கடைகள், இறைச்சி கடை, ஸ்டேஷனரி, உணவு பொருட்கள் விற்பனை, பால் பொருட்கள் விற்பனை, டெய்லர் கடை, மருந்து கடை என சிறிய அளவிலான கடைகள், வியாபாரம் செய்வோரும் தொழில் உரிமம் பெற வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது.இந்த நடைமுறை கடந்தாண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.காஞ்சிபுரம் மாநகராட்சியில் கடை நடத்துவோர், ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 800 - 40,000 ரூபாய் வரை செலுத்த வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. தொழில் உரிமம் பெறாமல், காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என, எந்த உள்ளாட்சிகளிலும் தொழில் நடத்த முடியாது என, காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் மாநகராட்சியில், 5,000க்கும் மேற்பட்ட கடைகள், நிறுவனங்கள், உணவகங்கள், பெரிய தொழில் அமைப்புகள் இயங்குகின்றன. இவற்றில், 2,000க்கும் மேற்பட்ட வியாபாரிகள், தொழில் உரிமம் வாங்காமல் இன்று வரை வியாபாரம் நடத்தி வருகின்றனர்.அவ்வாறு வியாபாரம் நடத்துவோர் கடைகளை மூடி, சீல் வைக்கவும் உள்ளாட்சி சட்டங்களில் வழிவகை உள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.தமிழக அரசின் புதிய உத்தரவால், சுய சான்று முறையில், 500 சதுரடி வரையிலான கடை நடத்துவோர், ஆதார், தொழில் விபரங்கள், வாடகை ஒப்பந்த ஆவணம், இருப்பிட ஆதார ஆவணங்களை கொண்டு, ஆன்லைனிலேயே விண்ணப்பித்தால், ஒரே நாளில் தொழில் உரிமம் பெற முடியும் என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.வீடு கட்டுவதற்கு சுய சான்று முறையில் விண்ணப்பித்தால் அனுமதி தருவது போல, தொழில் உரிமம் வழங்கும் நடைமுறையும் மாற்றப்பட்டுள்ளது. இதனால், மாநகராட்சி அலுவலகத்திற்கு அலைய வேண்டிய அவசியம் இருக்காது. ஆன்லைனிலேயே கட்டணம் கணக்கிட்டு செலுத்த வேண்டி வரும்.புதிய நடைமுறை எளிமைபடுத்தப்பட்டுள்ள நிலையில், இப்போது விண்ணப்பித்து தொழில் உரிமம் பெற வேண்டும் என, மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:தொழில் உரிமம் வாங்குவது பற்றிய புதிய உத்தரவு பற்றி விரிவான வழிகாட்டி விபரங்கள் எங்களுக்கு விரைவாக கிடைக்கும். கட்டணம் மற்றும் பிற விபரங்களும் அதில் கிடைக்கும். விரிவான விபரங்கள் கிடைத்த உடன் கூடுதல் விபரங்கள் தெரிவிக்கப்படும்.தொழில் உரிமம் பெறாத கடைகள் மூடி சீல் வைக்கப்படும். புதிய நடைமுறை பயன்படுத்தி வியாபாரிகள் உரிமம் பெற்று தொழில் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ