சேதமடைந்த மின்கம்பம் வாகன ஓட்டிகள் அச்சம்
உத்திரமேரூர்:காஞ்சிபுரம்- - வந்தவாசி நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, செய்யாற்றின் ஓரமாக அனுமந்தண்டலம், சிலாம்பாக்கம் வழியே கருவேப்பம்பூண்டி செல்லும் பிரதான சாலை உள்ளது.இந்த சாலையோரத்தில் மின்வாரியம் வாயிலாக மின் கம்பங்கள் நடப்பட்டு, அப்பகுதி விவசாய நிலங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், நீரேற்றும் அறை அருகே நடப்பட்டுள்ள மின் கம்பம் ஒன்று சேதமடைந்து, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மீது, மின் கம்பம் விழுந்து விபத்து ஏற்படுத்தும் அபாயநிலை உள்ளது. எனவே, சேதமடைந்த மின் கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.