நீர்வரத்து ஆதாரம் இல்லாததால் கோரைப்புல் வளர்ந்துள்ள தம்மனுார் ஏரி
வாலாஜாபாத்: பாலாறில் இருந்து தம்மனுார் ஏரிக்கு நீர்வரத்து ஆதாரம் இல்லாததால் தண்ணீரின்றி கோரைப்புல் வளர்ந்துள்ளது. வாலாஜாபாத் வட்டாரத்திற்கு உட்பட்டது தம்மனுார் கிராமம். இக்கிராமத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ், 300 ஏக்கர் பரப்பில் பெரிய ஏரி மற்றும் 200 ஏக்கரில் கடப்பேரி ஆகிய இரண்டு ஏரிகள் உள்ளன. மழைக்காலத்தில் இந்த ஏரிகள் முழுமையாக நிரம்பினால் அத்தண்ணீரை கொண்டு அப்பகுதியில் உள்ள 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும். எனினும், தம்மனுாரில் உள்ள ஏரிகளுக்கு போதுமான நீர்வரத்து ஆதாரம் இல்லாத நிலை உள்ளது. இதனால், தம்மனுாருக்கு முன்னதாக உள்ள அவளூர் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி அதன் உபரி நீர் வெளியேறும் பட்சத்தில் மட்டும்தான் தம்மனுார் ஏரி நிரம்புவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் பருவமழை துவங்கிய நிலையில் பாலாறு மற்றும் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு ஏரிகள் தற்போது நிரம்பி உள்ளது. ஆனால், தம்மனுார் ஏரிக்கு இன்னும் நீர்வரத்தே துவங்காமல் இருப்பது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, தம்மனுார் விவசாயிகள் கூறியதாவது, அவளூர் பாலாறின் அருகாமையில் 3 கி.மீ., துாரத்தில் தம்மனுார் ஏரி உள்ளது. பாலாறில் இருந்து தம்மனுார் ஏரிக்கு நீர்வரத்து கால்வாய் வசதி கடந்த காலத்தில் ஏற்படுத்தி இருந்தால் இச்சமயம் பெரிய ஏரி மற்றும் கடப்பேரி நிரம்பி இருக்கக்கூடும். ஆனால், அதற்கான வசதி இல்லாததால், 10 நாட்களாக பாலாறில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியும் அருகாமையில் உள்ள தம்மனுார் ஏரி தண்ணீர் இல்லாமல் உள்ளது. எனவே, பாலாறில் இருந்து தம்மனுார் ஏரிக்கு தண்ணீர் வந்தடையும் வகையில் நீர்வரத்து கால்வாய் வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.