உத்திரமேரூரில் ஆபத்தான முறையில் சரக்கு வாகனங்களில் பயணம்
உத்திரமேரூர்,:-உத்திரமேரூர் சுற்று வட்டார பகுதிகளில், சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பலர் பயணிக்கின்றனர். உத்திரமேரூர், தாலுகா தலைமையிடமாக இருப்பதால், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கல்வி, வணிகம், மருத்துவம் உள்ளிட்டவைக்காக தினமும் வந்து செல்கின்றனர். இதில், பெரும்பாலான கிராமங்களில் ஒருமுறை மட்டுமே அரசு, தனியார் பேருந்து இயக்கப் படுவதால், கிராம மக்கள் உத்திரமேரூர் வருவதற்கு சிரமப்படுகின்றனர். இதனால், பேருந்து இல்லாத நேரங்களில், 'டாடா ஏஸ்' சரக்கு வாகனத்திலும், டிராக்டர்களிலும் பயணித்து வருகின்றனர். அதேபோல, துக்க நிகழ்வு மற்றும் அரசியல் கூட்டங்களுக்கும் பொதுமக்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது. சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றிச் செல்லும்போது, விபத்து ஏற்பட்டால் ஒருவர் மீது ஒருவர் விழுந்து அதிக உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், வேகத்தடைகளை கடக்கும்போதும் தவறி விழுந்து விபத்தில் சிக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே, உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்வோரை, வட்டார போக்குவரத்து துறையினர் தடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.