காஞ்சிபுரம் குறுவட்டம் பிரிப்பு அரசாணை வராததால் தாமதம்
காஞ்சிபுரம்,:சட்டசபை அறிவிப்பு வெளியாகி, ஆறு மாதங்கள் ஆன நிலையில், அரசாணை வராததால், காஞ்சிபுரம் குறுவட்டம் மூன்றாக பிரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் தாலுகாவில் பரந்துார், சிட்டியம்பாக்கம், காஞ்சிபுரம், திருப்புட்குழி, கோவிந்தவாடி, சிறுகாவேரிப்பாக்கம் என, ஆறு குறுவட்டங்கள் உள்ளன. இதில், அதிகப்படியான வருவாய் துறை பணிகள் மேற்கொள்ளும் குறுவட்டமாக காஞ்சிபுரம் உள்ளது. 3,000 விண்ணப்பங்கள் காஞ்சிபுரம் குறுவட்டத்தில் வருமானம், இருப்பிடம், ஜாதி, வாரிசு, விதவை சான்று, கணவனால் கைவிடப்பட்ட பெண் சான்று, முதல் பட்டதாரி சான்று என, பல்வேறு சான்றுகள் கோரி, மாதந்தோறும் 3,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வருகின்றன. விண்ணப்பதாரர்களுக்கு சரியான நேரத்தில் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இந்த குறுவட்டம் கீழ் உள்ள 22 கிராம நிர்வாக அலுவலர்களிடம் இருந்து வரக்கூடிய வருவாய் துறை சான்றிதழ் களை, தாசில்தாருக்கு பரிந்துரை செய்ய போதிய அவகாசம் கிடைப்பதில்லை. இதனால், காஞ்சிபுரம் குறுவட்டத்தை மூன்றாக பிரிக்க வருவாய் துறை முடிவு செய்தது. திட்ட அறிக்கை இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டசபை கூட்ட தொடரில், காஞ்சிபுரம் குறுவட்டத்தை மூன்றாக பிரிக்க, வருவாய் துறை அமைச்சரிடம் இருந்து அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் குறுவட்டத்தை பிரித்து, செவிலிமேடு மற்றும் விஷ்ணு காஞ்சி என, கூடுதலாக இரண்டு குறுவட்டத்தை உருவாக்க, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறையினர், அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பியது. இந்த திட்ட அறிக்கை மீதான அரசாணையை, வருவாய் துறை இன்னும் பிறப்பிக்காமல் உள்ளது. அறிவிப்பு வெளியாகி ஆறு மாதங்கள் மேலான நிலையில், அரசாணை வெளியாகாததால், குறுவட்டத்தை பிரிக்க முடியாமல் உள்ளது. சான்றிதழ்களை பரிந்துரை செய்வதில் தாமதம் ஏற்படுவதோடு, வருவாய் துறையினருக்கு பணிச்சுமையும் ஏற்படுவதாக, வருவாய் துறையினர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'அக்டோபர் மாதத்தில் குறுவட்டத்தை பிரிப்பது தொடர்பான அரசாணை வந்து விடும். நிதித்துறையில் இது சம்பந்தமான கோப்புகள் உள்ளன' என்றார்.