மாநகராட்சியில் நிதி இல்லாததால் வளர்ச்சி பணி...முடக்கம் : ரூ.26 கோடி சொத்து வரி நிலுவை இருப்பதால் மந்தம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நிதியில்லாத சூழல் உள்ள நிலையில், சொத்து வரி, குடிநீர், பாதாள சாக்கடை, வணிக வளாகம், தொழில் வரி என, பல வகையான வரி இனங்களில், 26 கோடி ரூபாய் வரி பாக்கியாகவே உள்ளது. இவற்றை முறையாக வசூலித்தாலே, பல வளர்ச்சி பணிகளை வேகமாக முடிக்க முடியும் என நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் மாநகராட்சி, 36 சதுர கி.மீ., பரப்பளவில், நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அதில் 51 வார்டுகள் உள்ளன. இவற்றில் 30,000க்கும் மேற்பட்ட குடியிருப்பு, வணிக கட்டடங்கள் உள்ளன.மேலும், தொழிற்சாலைகள், சிறு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என பல வகையிலான தனியார் செயல்பாடுகள் உள்ளன.இதன்வாயிலாக, மாநகராட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இந்த நிதி வாயிலாக, பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இருப்பினும், வரி மற்றும் கட்டண விவகாரங்களில், சம்பந்தப்பட்ட கட்டடங்கள், நிறுவனங்களிடம் இருந்து போதிய அளவில் வசூலிக்கப்படாத காரணத்தாலேயே, கோடிக்கணக்கான ரூபாய் நிலுவை தொகையாக நீடிக்கிறது.நிலுவையில் உள்ள வரி இனங்கள், கட்டடணங்கள் ஆகியவற்றை முறையாக வசூலிக்க வேண்டிய 'பில்' கலெக்டர்கள் மெத்தனமாக இருப்பதால், வசூலிக்கப்பட வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய், மாநகராட்சிக்கு கிடைக்காமல் உள்ளது.காஞ்சிபுரம் மாநகராட்சியை பொறுத்தவரையில், அனைத்து வகையான வரி இனங்கள் வாயிலாக ஆண்டுதோறும் 25 கோடி ரூபாய்க்கு மேலாக வருவாய் கிடைக்கிறது.இந்த நிதியை கொண்டு மாநகராட்சிக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ள முடியாது என்பதால், அரசு பல கோடி ரூபாய் மானியமாக அளிக்கிறது. இருப்பினும், நகர்வாசிகளின் கோடிக்கணக்கான ரூபாய் வரி இனங்கள் பாக்கியாக உள்ளதால், நகரின் பல வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வியாபாரம் செய்வோர் 3.82 கோடி ரூபாய் நிலுவை தொகையாக பாக்கி வைத்துள்ளனர்.நிலுவையில் உள்ள இந்த வரி தொகையை வசூலித்தாலே சாலை சீரமைப்பு, புதிய கட்டடம் கட்டுதல், நீர்நிலைகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல வளர்ச்சி பணிகளை செய்ய முடியும்.உதாரணமாக, அல்லாபாத் ஏரி தனியார் நிறுவன பங்களிப்புடன் சீரமைக்கப்படுகிறது. ஆனால், கரைகள் பலப்படுத்தப்பட்டு, நடைபாதை, இருக்கைகள் அமைத்து, நடைபயிற்சிக்கு ஏற்ற வகையில் ஏரியை வடிவமைக்கலாம். ஆனால், நிதியில்லாமல் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு எதையும் செய்ய முடியவில்லை.அதேபோல் நிதியின்ற திணறுவதால், முக்கிய திட்டங்கள் பல செய்ய முடியாமல் உள்ளது. பூங்காக்கள், சாலைகள் போன்றவை மோசமான நிலையில் உள்ளன.இதுபோன்ற அடிப்படையான தேவைகளை சீரமைக்கக்கூட நிதியில்லாத சூழல் உருவாகிறது. அவற்றை தடுக்க, நிலுவை வரி தொகையை வசூலிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:காஞ்சிபுரம் மாநகராட்சி, இம்முறை அதிக வரி வசூல் செய்துள்ளது. கடந்தாண்டில் 20 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், இம்முறை 22.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. நிலுவை வரியை தொடர்ந்து வசூலித்து வருகிறோம்.வணிக கட்டடங்களை குடியிருப்பாக கணக்கு காட்டி வரி செலுத்தியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சரியான வரி விதித்தோம்.வரியே கட்டாமல் இருந்த பல அரசு கட்டடங்களுக்கும், குடியிருப்புகளுக்கும் வரி விதிப்ப வாயிலாக கோடிக்கணக்கான ரூபாய் சமீபத்தில் மாநகராட்சிக்கு வருவாய் கிடைத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரி பாக்கி :
குடியிருப்பு சொத்து வரி - 1,99,73,100தொழிற்சாலை சொத்து வரி - 1,60,500வணிக கட்டடங்கள் சொத்து வரி - 42,00,900காலிமனைகள் சொத்து வரி - 2,28,50,000தொழில் வரி - 3,19,74,600வணிக வளாக கடைகள் - 3,82,74,000திடக்கழிவு மேலாண்மை பயனாளிகள் கட்டணம் - 1,88,14,900அனைத்து வகை குடிநீர், வடிகால் வரி மற்றும் கட்டணம் - 11,57,60,500அனைத்து வகையிலான கல்வி வரி - 1,41,76,000மொத்தம் - 26,61,84,500