கோவில் மரங்கள் வெட்டி விற்பனை நிர்வாகம் மீது பக்தர்கள் குற்றச்சாட்டு
குன்றத்துார்:குன்றத்துார் அருகே கோவூரில், பழமை வாய்ந்த சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நவக்கிரகங்களில் இக்கோவில் புதன் தலமாக விளங்குகிறது. இங்கு ஏராளமான பக்தர்கள் வழிபடுகின்றனர். இந்த கோவிலை சுற்றி, கோவிலுக்குச் சொந்தமாக ஏராளமான நிலங்கள் உள்ளன. அங்கு, ஏராளமான மரங்கள் உள்ளன.இந்நிலையில், நிலத்தை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில், இங்குள்ள மரங்களை கோவில் நிர்வாகத்தினர் அடிக்கடி வெட்டி, விற்று வருகின்றனர். இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் தர்மகர்த்தா ஆகியோரால் நிர்வாகம் செய்யப்படுகிறது. கோவில் நிலத்தில் உள்ள 30 முதல் 50 ஆண்டுகள் பழமையான மரங்களை, கோவில் நிர்வாகத்தினர் அடிக்கடி வெட்டி விற்கின்றனர். மரங்களை வெட்டுவதற்கு முன், வனத்துறையிடம் மரத்திற்கான மதிப்பீடு செய்து அனுமதி பெற்று, ஏலம் விட்டு மரங்களை வெட்டிய பிறகு கிடைக்கும் வருவாயை, கோவில் கணக்கில் சேர்க்க வேண்டும் என விதிமுறை உள்ளது.ஆனால், இந்த கோவிலில் உள்ள மரங்களை தனித்தனியே, சில காலம் இடைவெளியில் வெட்டி விற்று, பணத்தை கோவில் கணக்கில் சேர்க்காமல், நிர்வாகிகள் பங்கு பிரித்துக் கொள்கின்றனர்.கோவில் மரங்களை அனுமதியின்றி வெட்டி விற்பனை செய்யவதை தடுக்க, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.