சாலவாக்கம் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
உத்திரமேரூர்:சாலவாக்கம் சொர்ணபுரீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூர் தாலுகா, சாலவாக்கம் கிராமத்தில் ஆனந்தவல்லி சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோவிலில் சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். இங்குள்ள கோவில் குளத்தில் பக்தர்கள் நீராடிவிட்டு சுவாமியை வழிபாடு செய்வது வழக்கம். தற்போது, கோவில் குளம் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குளத்தின் கரையில் முட்செடிகள் வளர்ந்தும், படிக்கட்டுகள் சரிந்தும் உள்ளன. இதனால், பக்தர்கள் குளத்தில் இறங்கி நீராட முடியாத நிலை உள்ளது. மேலும், குளத்தில் செடிகள் வளர்ந்துள்ளதால், விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே, சொர்ணபுரீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.