உலகளந்த பெருமாள் கோவில் மரத்தேரை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
காஞ்சிபுரம்:பழுதடைந்த நிலையில் உள்ள காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் மரத்தேரை சீரமைக்க, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில், 54வது திவ்யதேசமாக விளங்குகிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் பிரம்மோத்சவம் 10 நாட்கள் விமரிசையாக நடந்து வருகிறது.ஏழாம் நாள் உத்சவத்தில் தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். இதில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் மரத்தேரில் எழுந்தருளும் உலகளந்த பெருமாள், நான்கு ராஜவீதிகளிலும் பவனி வருவார்.ஆனால், நடப்பாண்டு உத்சவத்தின்போது, மரத்தேரில் உள்ள பல பாகங்கள் பழுதடைந்தும், சேதமடைந்தும் இருந்ததால், தேரோட்டம் நடைபெறவில்லை. இதனால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.வரும் 2026ம் ஆண்டு, தை மாத பிரம்மோத்சவத்திற்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ளதால், பழுதடைந்த மரத்தேரை சீரமைக்க, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம் கூறுகையில், ''கோவிலில் பழுதடைந்த நிலையில் உள்ள மரத்தேரை சீரமைக்கும் பணி அடுத்த மாதம் துவக்கப்பட உள்ளது,'' என்றார்.