ரயில் கடவுப்பாதை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்
காஞ்சிபுரம்:செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையே, மின்ரயில் வழித்தடம் செல்கிறது. இந்த ரயில் வழித்தடத்தில், மின்சாரம் ரயில்கள் மட்டுமல்லாது சில விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன.ரயில் இருப்பு பாதையில் இருக்கும் தண்டவாளங்களை புதிதாக மாற்றும் பணியில் ஒப்பந்த ஊழியர்கள் செய்து வருகின்றனர். இந்த பணிக்கு, கோவிந்தவாடி, ஊவேரி, புதுப்பாக்கம், பெரிய கரும்பூர், கூரம் உள்ளிட்ட பல்வேறு பிரதான ரயில் கடவுப்பாதைகளில் வாகனங்கள் செல்ல போடப்பட்ட சதுர பலகைகள் அகற்றிவிட்டு ஜல்லி கொட்டி உள்ளனர்.இந்த ஜல்லி கற்களால், கடவுப்பாதை கடந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதற்கு தீர்வு காண வேண்டும் என, கூரம் கேட் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் மறியலில் ஈடுபட முயன்றனர்.தகவல் அறிந்த ரயில்வே போலீசார் வாகனங்கள் செல்ல ஏதுவாக சரி செய்து விடப்படும் என, பொக்லைன் இயந்திரம் வாயிலாக சரி செய்து விட்டனர்.இருப்பினும், ரயில் கடவுப்பாதை கடந்து செல்லும் இருசக்கர வாகனங்கள் நிலை தடுமாறி செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.எனவே, விரைவாக சீரமைப்பு பணிகளை முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.ரயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தண்டவாளம் சீரமைப்பு பணிக்கு பின் அனைத்து கடவுப்பாதைகளும் தார் கொட்டி சரி செய்யப்படும்' என்றார்.