உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழையால் பாதித்த 4,276 ஏக்கருக்கு இழப்பீடு அரசுக்கு மாவட்ட நிர்வாகம் கருத்துரு

மழையால் பாதித்த 4,276 ஏக்கருக்கு இழப்பீடு அரசுக்கு மாவட்ட நிர்வாகம் கருத்துரு

காஞ்சிபுரம்:வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதத்தில் தீவிரமாக பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவம்பர் மாதம் இறுதியிலும், பெஞ்சல் புயல் சமயத்திலும், டிசம்பர் துவக்கத்திலும் கனமழை பெய்தது. இதனால், மாவட்டம் முழுதும் மழை, வெள்ள பாதிப்பு மீட்பு பணிகள் வேகமெடுத்த நிலையில், மழையால் வீடுகள் இடிந்து சேதமாகின. கால்நடைகளும் பல இறந்தன. இதுவரை, மாவட்ட அளவில் இரு மனித உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறையினர் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மாவட்டம் முழுதும் கனமழையால் நெற்பயிர் பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது.மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை, வேளாண் துறையினர், வருவாய் துறையினர், தோட்டக்கலை துறையினர் இணைந்து கணக்கெடுத்து வந்தனர். விவசாயிகளின் விபரங்கள், பாதிப்பு விபரம் போன்றவை சேகரித்து கணக்கீடு செய்யப்பட்டதில், ஐந்து தாலுகாக்களிலும், 4276 ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தோட்டக்கலை துறை சார்பில் ஆய்வு செய்ததில், 408 ஏக்கர் வாழை உள்ளிட்ட தோட்ட பயிர்கள் சேதமானது பதிவாகியுள்ளது.இந்த பாதிப்பு விபரங்களை, மாவட்ட நிர்வாகம் அரசுக்கு கருத்துருவாக அனுப்பியுள்ளது. சேதம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, தமிழக அரசாணை பிறப்பித்தவுடன், நிவாரணம் வழங்கப்படும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !