பொன்னேரிக்கரை நிறுத்தத்தில் விரைவு பஸ்கள் நின்று செல்லுமா?
காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு இடையே, நான்குவழி சாலை செல்கிறது. இந்த வழி தடத்தில் ஒசூர், தர்மபுரி, சேலம், வேலுார், ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சென்னை வரையில் பல்வேறு வழித்தட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்த பேருந்து வாயிலாக, தினசரி பல ஆயிரக்கணக்கான பயணியர், வேலுார், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு, வந்து செல்கின்றனர்.இதுபோன்ற பயணியருக்கு சவுகரியமாக, பிரதான கிராம பேருந்து நிறுத்தங்களில் அரசு, தனியார் பேருந்துகள் நின்று செல்கின்றன. இதில், காஞ்சிபுரம் நகரத்திற்கு செல்லாமல், புறவழி சாலையாக செல்லும் விரைவு பேருந்துகள், பொன்னேரிக்கரை பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும்.இதில், தடம் எண்:202, அரசு பேருந்து ஓட்டுனர்கள், பொன்னேரிக்கரையில் பேருந்து நிற்காது. அதற்கு பதிலாக, ஏனாத்துார் தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நிற்கும். அங்கு இறங்கி காஞ்சிபுரம் செல்லுங்கள் என, அடாவடியாக பேசுகின்றனர்.இதனால், பேருந்து ஓட்டுனருக்கும், பயணியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஏனாத்துாரில் இறங்கும் பயணியர், மற்றொரு பேருந்து பிடித்து காஞ்சிபுரம் செல்வதற்குள் சிரமப்பட வேண்டி உள்ளது.எனவே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து அரசு விரைவு பேருந்துகளும், பொன்னேரிக்கரை பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும் என, பயணியர் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.