உத்திரமேரூரில் வடிகால்வாய் கட்டும் பணி மந்தம்
உத்திரமேரூர்,:உத்திரமேரூர் பேரூராட்சியில், உத்திரமேரூர்- - காஞ்சிபுரம் சாலையில், கேதாரீஸ்வரர் கோவில் தெரு உள்ளது. இத்தெருவில், மழைநீர் வடிகால்வாய் மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், மழைக்காலங்களில் அப்பகுதியினர் பல சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.இதனால், இத்தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து, அவ்வப்போது நம் நாளிதழில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கதுஅதன் தொடர்ச்சியாக, உத்திரமேரூர், கேதாரீஸ்வரர் கோவில் தெரு மற்றும் பெரிய நாரசம்பேட்டை தெருவில், மழைநீர் வடிகால்வாய் ஏற்படுத்தவும், 10 இடங்களில் சிறுபாலங்கள் கட்டவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்காக சமூக நீதி நிதியின் கீழ், 99 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன் பணி துவங்கியது. ஆனால், அப்பணி மந்தகதியில் நடைபெறுவதாக அப்பகுதியினர் கூறி வருகின்றனர்.இதுகுறித்து, உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த சோழன் என்பவர் கூறியதாவது:உத்திரமேரூர் கேதாரீஸ்வரர் கோவில் தெருவில், ஒருபுறம் மட்டுமே கால்வாய் கட்டுமான பணி நடைபெறுகிறது. மற்றொரு புறத்தில் இன்னும் பணி துவங்கவில்லை.விரைவில் பருவமழைக் காலம் வர உள்ளதால், பணி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.உத்திரமேரூர் பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது தெருவின் ஒரு பகுதியில் அப்பணி முழுமை பெற்றுள்ளது. விரைவில் மற்றொரு பகுதிக்கும் வடிகால்வாய் கட்டுமான பணி நடைபெறும்,'' என்றார்.