உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி மாநகராட்சியில் பணியாளர் பற்றாக்குறையால் நிர்வாகம்...ஸ்தம்பிப்பு! : 102 பணியிடங்களில் 62 காலியாக இருப்பதால் திணறல்

காஞ்சி மாநகராட்சியில் பணியாளர் பற்றாக்குறையால் நிர்வாகம்...ஸ்தம்பிப்பு! : 102 பணியிடங்களில் 62 காலியாக இருப்பதால் திணறல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்ந்து, மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், மொத்தமுள்ள 102 பணியிடங்களில், 62 பணியிடங்கள் இன்னமும் காலியாகவே இருப்பதால், மாநகராட்சியின் வளர்ச்சி பணிகள் பாதிக்கும் சூழல் உருவாகிறது. அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப வேண்டிய நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனரகம் அமைதியாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.காஞ்சிபுரம் மாநகராட்சி, கடந்த 2021ல் தரம் உயர்ந்த பின், 51 வார்டுகளும், 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அவற்றுக்கு என தனித்தனி மண்டல அலுவலகங்கள் கட்டி செயல்படுகின்றன. அதேபோல், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால், உதவி கமிஷனர்கள், மாமன்ற செயலர் என, பல்வேறு புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.ஆனால், மாநகராட்சியாக தரம் உயர்ந்து, மூன்று ஆண்டுகள் ஆன போதும், போதிய பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், மாநகராட்சியின் பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. பணியாளர் பற்றாக்குறை அதிகளவில் இருப்பதால், மற்ற ஊழியர்களுக்கு பணிச்சுமையும் அதிகரிப்பதாக, ஊழியர்கள் பலரும் புலம்பி வருகின்றனர்.காஞ்சிபுரம் மாநகராட்சியை பொறுத்தவரை, கமிஷனர், உதவி கமிஷனர்கள், பொறியாளர், உதவி பொறியாளர்கள், சுகாதார அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள், நகரமைப்பு பிரிவு அதிகாரிகள், உதவியாளர்கள் என, 23 வகையில், 102 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.ஆனால், 62 பணியிடங்கள் காலியாகவே இருப்பதால், வளர்ச்சி பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியாமல், கமிஷனர், கவுன்சிலர்கள், மேயர் என, அனைத்து தரப்பினருக்கும் தலைவலியாக உள்ளது.கமிஷனருக்கு அடுத்தபடியாக வளர்ச்சி பணிகளை கவனிக்க வேண்டிய உதவி கமிஷனர் பணியிடங்கள், 4 மண்டலங்களுக்கு, தலா ஒன்று இருக்க வேண்டும்.ஆனால், ஒருவர் மட்டுமே பணியாற்றி வருகிறார்; மூன்று பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல், சுகாதார பணிகளை கவனிக்க வேண்டிய துப்புரவு ஆய்வாளர் பணியிடங்கள் 12ல், 11 காலியாக உள்ளன.குறிப்பாக, நகரமைப்பு ஆய்வாளர் பணியிடங்கள் 8ல், அனைத்துமே காலியாகவே உள்ளன. அதேபோல், பெரும்பாலான பணியிடங்கள் காலியாக இருப்பதால், மாநகராட்சியின் ஒட்டுமொத்த செயல்பாடும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது.தமிழக அரசு கொண்டு வந்துள்ள சுய சான்றிதழ் முறையிலான கட்டட அனுமதிக்கு மாநகராட்சியில் பலரும் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கின்றனர்.அவ்வாறு, கட்டட அனுமதி விண்ணப்பங்களை சரிபார்க்கவும், கட்டடங்களை ஆய்வு செய்யவும் நகரமைப்பு பிரிவில் போதிய பணியிடங்கள் இல்லை. நகர திட்டமிடுனர், நகரமைப்பு ஆய்வாளர்கள் என, நகரமைப்பு பிரிவில் மட்டும் 9 பணியிடங்கள் காலியாக உள்ளன.மாநகராட்சி அலுவலகத்திற்கு வரி, கட்டட அனுமதி, சுகாதாரம் என, பல்வேறு வகையான சேவைகளுக்கு விண்ணப்பிக்கவும், சந்தேகம் கேட்கவும் செல்லும் நகரவாசிகளுக்கு, ஊழியர்கள் பற்றாக்குறையால் முறையான பதிலும் கிடைப்பதில்லை.தற்போது பணியாற்றும் பல அதிகாரிகள், பணியிடம் மாறி செல்ல முயற்சிக்கின்றனர். சிலர் பணியிடம் மாறினால், அதிகாரிகள் எண்ணிக்கை மேலும் குறையும்.கட்டுமானம், சாலை, சீரமைப்பு பணி என, மாநகராட்சியின் அன்றாட வளர்ச்சி பணிகளை கண்காணிக்க, உதவி பொறியாளர் நிலையில், பணி மேற்பார்வையாளர்கள் 16 பணியிடங்கள் இருக்க வேண்டும்.ஆனால், 13 பணியிடங்கள் காலியாகவே உள்ளன. ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ளும் பணிகளை சரிபார்க்க தேவையான உதவி பொறியாளர்களும் இல்லாததால், திட்ட பணிகள், போதிய கண்காணிப்பு இன்றி நடக்கிறது.மாநகராட்சியில் கட்டப்பட்ட பல கட்டுமான பணிகள் தரமற்ற முறையில் கட்டியிருப்பதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன.மாநகராட்சியில் உள்ள காலி பணியிடங்களை பற்றி, நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், பணியமைப்பு விவகாரங்களை இயக்குனரகம் கவனிப்பதால், புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. காலி பணியிடங்கள் பற்றி, எழுத்துப்பூர்வமாகவும், வாய்மொழியாகவும் முந்தைய கமிஷனர்கள் தெரிவித்துள்ளனர்.ஆனால், தற்போது வரை காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது, மாநகராட்சியின் வளர்ச்சியை பாதிக்கும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் காலியாக உள்ள அதிகாரிகள் பதவியிடங்கள்

பதவி பெயர் - மொத்த பணியிடங்கள் - காலி பணியிடங்கள்கமிஷனர்10உதவி கமிஷனர் மண்டலம் 4 3உதவி கமிஷனர் ( வருவாய்) 10கணக்கு அலுவலர் 1 1மாமன்ற செயலர் 1 1நிர்வாக அலுவலர் 1 1கண்காணிப்பாளர் 6 3உதவி வருவாய் ஆய்வாளர் 4 4உதவியாளர்கள் 11 1நேர்முக உதவியாளர்கள் 3 3இளநிலை உதவியாளர்கள் 13 3துப்புரவு அலுவலர் 4 2துப்புரவு ஆய்வாளர் 12 11உதவி பொறியாளர்கள் 8 7வரைவாளர் 1 1தொழில்நுட்ப உதவியாளர்கள் 16 13நகர திட்டமிடுனர் 1 1நகரமைப்பு ஆய்வாளர் 8 8மொத்தம் 102 62


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை