திரவுபதியம்மன் கோவிலில் நாளை துரியோதனன் படுகளம்
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம், கோகுலம் வீதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா, கடந்த 4ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மன் வீதியுலா நடந்தது. விழாவையொட்டி தினமும் மாலை 3:00 மணி முதல், 6:00 மணி வரை மஹாபாரத சொற்பொழிவு நடக்கிறது.இதில், திருவண்ணாமலை மாவட்டம், ஜப்தி காரியபந்தல் கிராமம், பால்ராஜன் மஹாபாரதத்தில் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றுகிறார். கடலாடி தங்கவேல் கவி வாசிக்கிறார். விழாவின் மற்றொரு நிகழ்ச்சியாக, கடந்த 18ம் தேதி முதல், தினமும் இரவு 10:00 மணிக்கு ரேணுகாம்பாள் கட்டை கூத்து நாடக மன்றத்தினரின் மஹாபாரதம் நாடகம் நடந்து வருகிறது.இதில், முதல் நாளன்று, வில் வளைப்பு என்ற தலைப்பிலும், 19ம் தேதி சுபத்திரை திருமணம், 20ம் தேதி ராஜசூய யாகம், 21ம் தேதி திரவுபதி துகில் என்ற தலைப்பிலும் நாடகம் நடந்தது. கடந்த 22ம் தேதி இரவு அர்ச்சுணன் தபசு நாடகம் துவங்கியது. நாடகத்தின் தொடர் நிகழ்வாக, 23ம் தேதி காலை 6:00 மணிக்கு அர்ச்சுனன் வேடமிட்ட கலைஞர், 40 அடி உயர தபசு மரத்தில் ஏறி தவம் புரியும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.தொடர்ந்து குறவஞ்சி, விராட பருவம், கிருஷ்ணன் துாது, அரவான் களபலி என்ற தலைப்பிலும், நேற்று கர்ண மோட்சமும் நடந்தது.இன்று, பதினெட்டாம் போர் என்ற தலைப்பிலும் மஹாபாரத நாடகம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, வேகவதி நதிக்கரையில் நாளை காலை, துரியோதனன் படுகளமும், மாலை தீமிதி திருவிழாவும், 30ம் தேதி தருமர் பட்டாபிஷேகத்துடன் 27 நாட்களாக நடந்து வந்த அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா நிறைவு பெறுகிறது.