உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பிச்சை எடுப்போர் இல்லாத நகரமாக காஞ்சியை உருவாக்க... முயற்சி: மத்திய அரசின் ஆப்பரேஷன் ஸ்மைல் திட்டத்தில் நடவடிக்கை

பிச்சை எடுப்போர் இல்லாத நகரமாக காஞ்சியை உருவாக்க... முயற்சி: மத்திய அரசின் ஆப்பரேஷன் ஸ்மைல் திட்டத்தில் நடவடிக்கை

காஞ்சிபுரம்:மத்திய அரசின், 'ஆப்பரேஷன் ஸ்மைல்' திட்டத்தின் மூலமாக, பிச்சை எடுப்போர் இல்லாத நகரமாக காஞ்சிபுரத்தை மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, தனியார் அறக்கட்டளை ஒன்றுடன் இணைந்து, காஞ்சி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க உள்ளது. 'ஆப்பரேஷன் ஸ்மைல்' திட்டம், மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில் துவக்கப்பட்டு, நாடு முழுதும் பல்வேறு வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக கல்வி, குழந்தைகள் பாதுகாப்பு, தனி நபர் பாதுகாப்பு, மறுவாழ்வு என, பல்வேறு வகையிலான துணைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,' ஆப்பரேஷன் ன் ஸ்மைல்' திட்டத்தில், பிச்சை எடுப்பவர்கள் மற்றும் பிச்சை எடுக்கும் திருநங்கையர் ஆகியோரின் மறுவாழ்வுக்காக, மத்திய அரசு சார்பில், துணை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம், நாடு முழுதும் பல்வேறு நகரங்களில் செயல்படுத்தப்படும் நிலையில், காஞ்சிபுரம் நகரில் பிச்சையெடுப்போரை குறைத்து, பிச்சை எடுப்பவர்களே இல்லாத நிலையை ஏற்படுத்த முதற்கட்ட முயற்சிகள் துவங்கி உள்ளன. காஞ்சிபுரம் மாநகராட்சியில் கோவில் வாசல்கள், சிக்னல்கள், பிரபலமான கடைகளின் வாசல்களில் பிச்சை எடுப்போர் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் பிச்சை கேட்டு தொந்தரவு செய்வதால் பக்தர்கள், வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைகின்றனர். குறிப்பாக, வெளிநாட்டவர்கள் காஞ்சிபுரத்திலுள்ள முக்கிய கோவில்களுக்கு வரும்போது, இவர்களின் தொல்லை அதிகரிக்கிறது. இதனால், பிச்சை எடுப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிகள், 'ஆப்பரேஷன் ஸ்மைல்' திட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளன. இத்திட்டத்தில், பிச்சை எடுப்போருக்கு திறன் பயிற்சி, காப்பகத்தில் தங்க வைப்பது, வியாபாரம் செய்ய உதவி செய்வது போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். பல தரப்பினருக்கும் தொந்தரவாக இருக்கும் பிச்சை எடுப்போரை முறையாக அணுகி, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க, தனியார் அறக்கட்டளை ஒன்றை, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நியமிக்க உள்ளது. மதுரை மாநகராட்சியைச் சேர்ந்த பிருந்தாவனம் அறக்கட்டளை என்ற தனியார் அமைப்பு, இப்பணியை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்துள்ளது. கடந்த மே மாதம் நடந்த மாநகராட்சி கூட்டத்திலும், ஆப்பரேஷன் ஸ்மைல் திட்டம் மூலமாக, பிச்சை எடுப்போர் இல்லாத காஞ்சிபுரம் நகரத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதையடுத்து, அறக்கட்டளை அமைப்பினரை அழைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் துவ ங்க உள்ளது. மறுவாழ்வு நடவடிக்கை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தனியார் அறக்கட்டளை நிர்வாகத்தை அழைத்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம். முதலில், காஞ்சிபுரம் நகரில் பிச்சை எடுப்போர் எத்தனை பேர் உள்ளனர் என்பதை, அந்த அறக்கட்டளை கணக்கெடுக்கும். அதன் தொடர்ச்சியாக, அவர்களுக்குத் தேவையான மறுவாழ்வு நடவடிக்கைகள் எடுக்கப்படும். திறன் பயிற்சி வழங்குவது, அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் பெற்றுத் தருவது என, பல வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, திருநங்கையரும் இத்திட்டத்தில் கணக்கில் எடுக்கப்படுவர். அவர்களுக்குத் தேவையான உதவிகள், மறுவாழ்வு நடவடிக்கைகள் இத்திட்டத்தில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஆக 10, 2025 07:24

இன்னும் நிறைய கோவில் கட்டலாம்.


சண்முகம்
ஆக 09, 2025 07:04

அங்கே நிறைய மடங்கள் இருக்கே? என்ன பண்ணுவாங்க,?


சமீபத்திய செய்தி