உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்க தேர்தல் தலைவர், மண்டல உறுப்பினர்கள் தேர்வு

ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்க தேர்தல் தலைவர், மண்டல உறுப்பினர்கள் தேர்வு

உத்திரமேரூர் : பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலான ஏரிகள் சார்ந்து, ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்கம் ஏற்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு சங்கத்திற்கும் ஒரு தலைவர் மற்றும் ஆட்சி மண்டல உறுப்பினர் பதவிகள் வழங்கப்படுகின்றன.வெற்றி பெறுவோர் ஐந்து ஆண்டுகள் இப்பதவி வகிப்பர். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 92 ஏரிகளில், 80 ஏரிகளுக்கான சங்க தலைவர் மற்றும் ஆட்சி மண்டல உறுப்பினர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மீதமுள்ள 12 ஏரிகளுக்கான சங்க தேர்தல் நேற்று நடந்தது.நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மார்க்கண்டேயன், உதவி பொறியாளர்கள் கண்ணன், நரேந்திர குமார், சீனிவாச பிரகாஷ் மற்றும் ஓட்டு சாவடி அலுவலர்கள் ஆகியோர் கண்காணிப்பில், வருவாய் துறையினர் இணைந்து போலீசார் பாதுகாப்புடன் இத்தேர்தல் நடைபெற்றது.காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. விவசாயிகள் ஆர்வத்துடன் ஓட்டளித்தனர். மதியம் 2:00 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்து, ஓட்டு பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டது.அதை தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியிடப்பட்டன.வெற்றி பெற்றோர், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்தோருக்கு காஞ்சிபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்கு, ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் நாளை மறுதினம், வெற்றி பெற்றமைக்கான சான்று வழங்கப்படும், என நீர்வளத் துறை உதவி செயற் பொறியாளர் மார்க்கண்டேயன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி