தொடர்பு எல்லைக்கு அப்பால் மின்வாரிய பொறியாளர்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், கோவிந்தவாடி மின் வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, இளநிலை பொறியாளர் பணியிடத்தில் பெண் அதிகாரி ஒருவர் பணிபுரிந்து வந்தார். அவருக்கு இடமாறுதல் அளிக்கப்பட்ட பின், வேறு யாரையும் நியமிக்கவில்லை.அதற்கு பதிலாக, வெள்ளைகேட் மின்வாரிய அலுவலக பொறியாளருக்கு கூடுதல் பொறுப்பு நியமிக்கப்பட்டு உள்ளது. இந்த மின்வாரிய அலுவலர் கோவிந்தவாடி சுற்றியுள்ள கிராம மக்களின் மொபைல் அழைப்பு ஏற்பதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குறிப்பாக, கோவிந்தவாடி வீர ஆஞ்சநேயர் கோவில் தெருவில், ஒரு மாதமாக குறைந்த மின்னழுத்த மின்சாரம் வினியோகமாகிறது. அதை சரி செய்ய ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் மற்றும் கிராம மக்கள் புகார் அளித்தும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.அதேபோல, கொட்டவாக்கம், புரிசை, புள்ளலுார் ஆகிய பகுதிகளில் மின் மாற்றிகளில் பியூஸ் போனாலும் போடுவதற்கு மொபைலில் தொடர்புக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.மின் வாரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அவசர எண் அழைப்பையும் ஏற்பதில்லை என, மின் நுகர்வோர் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதை தவிர்க்க, கோவிந்தவாடி மின்வாரிய அலுவலகத்திற்கு இளநிலை பொறியாளர் நியமிக்க சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட அலுவலர் ஒருவர் கூறுகையில், 'ஒருவர் இரண்டு அலுவலக நுகர்வோரின் குறைகளை தீர்ப்பதால் மொபைல் எண் பிசியாக இருக்கும். இனிமேல் நுகர்வோர் அளிக்கும் புகார்களுக்கு முறையாக நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்படும்' என்றார்.