எருமையூர் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றி துார்வார கோரிக்கை
குன்றத்துார்:குன்றத்துார் அருகே, எருமையூர் ஊராட்சியில், பெரிய ஏரி உள்ளது. படப்பை பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி நீரை பயன்டுத்தி, 50 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது.இந்த ஏரியின் நீர்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து, 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பாளர்கள், கரையை உடைத்து வழி ஏற்படுத்தியுள்ளனர்.மேலும், ஏரியின் உள்ளே, தனியாருக்கு சொந்தமான ஜல்லி அரைக்கும் தொழிற்சாலை இயங்குகிறது. ஏரியின் கரை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில், அதிக அளவில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.இந்த ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி துார் வாரி ஆழப்படுத்தினால், எதிர்காலத்தில், சென்னை புறநகர் பகுதிமக்களுக்கு, தண்ணீர் வினியோகம் செய்ய முடியும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.