உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  ஏ.ஐ., வந்தாலும் பக்தி தான் முக்கியம்; விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை

 ஏ.ஐ., வந்தாலும் பக்தி தான் முக்கியம்; விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை

காஞ்சிபுரம்: “கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு வந்தாலும், நம் பக்தி தான் நமக்கு முக்கியம். பக்தி இருந்தால் தான், நாம் அனைத்து தொழிலையும் செய்ய முடியும்,” என, காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். 'திருமுறை திருவிழா' எனப்படும் மூன்று நாட்கள் ஆன்மிக பெருவிழா, காஞ்சிபுரத்தில் கடந்த 19ம் தேதி துவங்கியது. மூன்றாம் நாளான நேற்று நிறைவு விழா நடந்தது. நேற்று காலை சிவனடியார்கள், சிவபக்தர்கள் என, 508 பேர் பங்கேற்று சிவபூஜை செய்தனர். ஓதுவார்கள் திருமுறை பேழை வழிபாடு நடத்தினர். தருமை ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் தலைமையில், ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கல்யாண வைபவம், வெகுவிமரிசையாக நடந்தது. திருமுறை நிறைவு விழாவில், காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பக்தர்களுக்கு வழங்கிய ஆசியுரை: ஆன்மிக உணர்வு இருந்தால் தான், எந்த வேலையையும் செய்ய முடியும். கோவில்களுக்கு வாரத்திற்கு ஒரு முறையாவது செல்ல வேண்டும். தினமும் சென்றால் விசேஷம். நாட்டை காக்க கலாசாரம் முக்கியம். பரம்பரை தழைக்க வேண்டுமென்றால் கல்யாணம் முக்கியம். இங்கு, சுவாமி திருக்கல்யாண உத்சவத்தை சிறப்பாக நடத்தினீர்கள். பனிப்பொழிவு இருந்தாலும், காலையிலேயே மக்கள் ஆர்வத்தோடு வந்தனர். மாவடி சேவை, பங்குனி உத்சவத்திற்கு வருவது போல் மக்கள் வந்ததை பார்க்க முடிந்தது. பல விதமான லிங்கங்கள் இங்கு வைத்திருந்தீர்கள்; முதலியார்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாயத்தினரும் இதில் இணைந்திருக்கின்றனர். நம் நாடு முன்னேற வேண்டும் என்றால், எத்தனை இயந்திரம் வந்தாலும், கைத்தொழில் நலிந்துவிடக் கூடாது. காஞ்சிபுரம் நகரம் புண்ணியஸ்தலமாக விளங்குகிறது. நகரமைப்பு, நீர் மேலாண்மை போன்றவை முந்தைய காலத்திலேயே காஞ்சிபுரத்தில் இருந்தது. ஸ்ரீசக்கரம் அமைந்த ஊர் காஞ்சிபுரம். அகண்ட பாரதத்தில், 51 சக்தி பீடங்கள் இருந்தன. இந்தியாவில் இப்போது 40 சக்தி பீடங்கள் உள்ளன. பாகிஸ்தானில், வங்கதேசத்தில் சில சக்தி பீடங்கள் உள்ளன. வங்க தேசத்தில் உள்ள டாக்காவுக்கு சென்ற ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அங்குள்ள கோவிலில் சண்டி ஹோமம் நடத்தினார். அங்கு, சங்கராச்சாரியார் 'கேட்' என்ற நுழைவாயிலையும் திறந்து வைத்தார். சக்தி பெற, நாம் அனைவரும் சேர்ந்து பணிபுரிய வேண்டும். காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில், ஓராண்டுக்கு 80 நாட்கள் திருவிழா நடக்கிறது. வேறு எங்கும் இதுபோல் திருவிழாக்கள் நடப்பதில்லை. இவை மேலும் அதிகரிக்க, மக்களின் ஒத்துழைப்பு தேவை. திருப்பாவை, திருவெம்பாவை, பஜனை கோஷ்டிகள் ஆகியவற்றை நாம் ஊக்குவிக்க வேண்டும். கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு வந்தாலும், நம் பக்தி தான் நமக்கு முக்கியம். பக்தி வந்தால் தான், நாம் அனைத்து தொழில்களையும் செய்ய முடியும். மனிதன், தெய்வம் இடையே பக்தி தான் இணைப்பு பாலமாக உள்ளது. இவ்வாறு அவர் ஆசியுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி