பாசன கால்வாய் கரை உடைந்ததால் கோவிந்தவாடி வயலில் புகுந்த உபரிநீர்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் சிறிய ஏரி மற்றும் பெரிய ஏரி என, இரு ஏரிகள் உள்ளன. சிறிய ஏரி கலங்கல் வழியாக செல்லும் உபரி நீரால், பெரிய ஏரி நிரம்பும். 'பெஞ்சல்' புயல் காரணமாக பெய்த மழையால், கோவிந்தவாடி இரு ஏரிகளும் நிரம்பின.இதுதவிர, கோவிந்தவாடி ஏரியின் வரத்து கால்வாய் வாயிலாக, உபரிநீர் அதிகளவு வந்துக் கொண்டிருக்கிறது. இதனால் சிறிய ஏரி, பெரிய ஏரி கலங்கல் வழியாக வெளியேறும் தண்ணீர், கரை உடைந்ததால், கோவிந்தவாடி ஏரி வாயிலாக பாசனம் பெறும் வயல்வெளிகளில் புகுந்துள்ளன. காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையோர பாசன கால்வாய்கள், சாலை விரிவுபடுத்தும் போது அகற்றப்பட்டது. அதன்பின் பெயரளவிற்கு சீரமைக்கப்பட்டது.சீரமைக்கப்பட்ட கால்வாய் கரை பலமில்லாததால், உபரி நீர் வெளியேறும் கால்வாய் உடைப்பு ஏற்பட்டு, விளை நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதை சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து, சீரமைக்க வேண்டும் என, கோவிந்தவாடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.