சாலையோரம் கிணற்றால் ஆபத்து கம்பி வேலி அமைக்க எதிர்பார்ப்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், சாலையோர திறந்தவெளி கிணறுகளுக்கு, கம்பி வேலி அமைக்க பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இதில், திறந்தவெளி கிணறு, ஆழ்துளை கிணறு உள்ளிட்ட நீராதாரங்கள் உள்ளன. இதில், ஆபத்தாக இருக்கும் திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளை பாதுகாக்க வேண்டும் என, ஊரக வளர்ச்சி துறையினர், அந்தந்த ஊராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர். இருப்பினும், சில உள்ளாட்சி நிர்வாகங்கள் திறந்தவெளி கிணறுகள் மீது பாதுகாப்பு கம்பி வேலி அமைக்க முடியவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, ஏகனாபுரம் ஏரிக்கரை சாலையோர திறந்தவெளி கிணறு; செல்லம்பட்டிடை கிராமத்தில் சாலையோர கிணறு உள்ளிட்ட பல்வேறு திறந்தவெளி கிணறுகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தவில்லை. எனினும், அரசு இடங்களில் ஆறு திறந்தவெளி கிணறுகளுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், தனியாருக்கு சொந்தமான 31 இடங்களில் திறந்தவெளி கிணறுகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்க முடியவில்லை என, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தவறி விழும் அபாயம் உள்ளது என, வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். எனவே, சாலையோரம் ஆபத்தாக இருக்கும் திறந்தவெளி கிணறுகளுக்கு பாதுகாப்பு அம்சத்தை ஏற்படுத்த வேண்டும் என, பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.