தொழிற்சாலை நிர்வாகங்கள் சேவை பெற இன்று முகாம்
காஞ்சிபுரம்:தொழிற்சாலை சம்பந்தமான இணையதள புதுப்பித்தல், விண்ணப்பம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக இன்று ஸ்ரீபெரும்புதுார், திருமுடிவாக்கத்தில் சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்ட செய்தி குறிப்பு : தொழிற்சாலை உரிமம் விண்ணப்பம், உரிமம் புதுப்பித்தல், வரைபட ஒப்புதல், ஆண்டறிக்கைகள், ஒப்பந்த தொழிலாளர் பதிவுச்சான்று மற்றும் உரிமம் பெறுதல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் தொழில் துறையின் இணையதளம் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தொழிற்சாலை பெயர் மாற்றம், உரிமையாளர் மாற்றம், ஒப்பந்த தொழிலாளர் பதிவு சான்று திருத்தம் போன்ற சேவைகளும் https://dish.tn.gov.inஇணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, கட்டணங்கள் செலுத்தப்படுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள தொழிற்சாலைகளின் பதிவுகளை புதிதாக மேம்படுத்தப்பட்ட இணையதளத்தில் மேற்கொள்ளும் வகையில், சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும், பதிவேற்றம் செய்யும் வழிமுறைகளை அறிந்து கொள்ளவும் இன்று சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, மாம்பாக்கத்தில் உள்ள சிப்காட் மையத்திலும், திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. எனவே, தொழிற்சாலை நிர்வாகத்தினர் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.