உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குண்டுரக நெல் கொள்முதல் செய்ய முடியாது ஊழியரின் அடாவடியால் விவசாயிகள் தவிப்பு

குண்டுரக நெல் கொள்முதல் செய்ய முடியாது ஊழியரின் அடாவடியால் விவசாயிகள் தவிப்பு

காஞ்சிபுரம்:களியப்பேட்டை நெல் கொள்முதல் நிலையத்தில், குண்டுரக நெல் கொள்முதல் செய்ய முடியாது என, நுகர்பொருள் வாணிப கழக ஊழியர் அடம் பிடித்து வருவதால், விவசாயிகள்பரிதவித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகாவில், களியப்பேட்டை நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில், சன்ன ரகம் மற்றும் குண்டு ரகம் ஆகிய இரு வித ரக நெல்லை, நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்கள் கொள்முதல் செய்ய வேண்டும். இங்கு, குண்டு ரக நெல்லை விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய மறுப்பதாக, விவசாயிகள் இடையே குற்றசாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, கடந்த மாதம் அறுவடை செய்த குண்டு ரக நெல்லை, 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யவில்லை. இதனால், விவசாயிகளின் நெல் முளைக்கும் அபாயம் உள்ளது என, அவர்கள் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, காவணிப்பாக்கம் கிராமத்தைச்சேர்ந்த விவசாயி சங்கர் கூறியதாவது: கடந்த செப்.,15ம் தேதி ஒன்பது ஏக்கர் குண்டு ரக நெல் அறுவடை செய்து, களியப்பேட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய பதிவு செய்துள்ளேன். குண்டுரக நெல் பிடிப்பதில்லை என, நுகர்பொருள் வாணிப கழக ஊழியர் கூறுகிறார். மேலும், நெல் விற்பனைக்கு எடுத்து வரும் விவசாயிகளை, தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தி வருகிறார். நெல் வியாபாரிகளிடம் இருந்து, நேரடியாக அவரே இறக்குமதி செய்து, இரவு நேரங்களில் எடை போடுகிறார். நுகர்பொருள் வாணிப கழக ஊழியரின் நெல் எடை போட்ட பின் தான் விவசாயிகளின் நெல் எடை போட முடியும். அதுவும், குண்டு ரக நெல் கொள்முதல் செய்ய மாட்டோம் என, பேசி வருகிறார். சம்மந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சன்னம் மற்றும் குண்டு ரக நெல்லை கொள்முதல் செய்து வருகிறோம். சம்மந்தப்பட்ட விவசாயியின் குண்டுரக நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ