அடுத்த ஆண்டில் ஒரு டன் கரும்புக்கு ரூ.4,000 வழங்க வாய்ப்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் தகவல்
மணல்மேடு:படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில், உத்திரமேரூர் கரும்பு கோட்டத்திற்கு உட்பட்ட கரும்பு விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், மணல்மேடு கிராம தனியார் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் காமாட்சி கூட்டத்திற்கு தலைமை ஏற்றார். அவர், தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் சர்க்கரைத் துறையின் சிறப்பு திட்டங்கள் குறித்தும், கரும்பு விவசாயிகளுக்கான சலுகைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.நடப்பாண்டில், சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் அனுப்பிய கரும்புக்கு மாநில அரசு வாயிலாக வழங்கப்படும் ஊக்கத்தொகை 349 ரூபாயுடன் சேர்த்து, ஒரு டன் கரும்புக்கு, 3,500 ரூபாய் வழங்கப்பட உள்ளதாக கூறினார்.மேலும், அடுத்த ஆண்டில் ஒரு டன் கரும்புக்கு 4,000 ரூபாய் வழங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.எனவே, விவசாயிகள் அதிக அளவிலான நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்ய முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.அதை தொடர்ந்து பேசிய படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பெருக்க அலுவலர் ஜெகதீசன், கரும்பு உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பங்கள் மற்றும் பல்வேறு திட்டங்களையும் அதன் பயன்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.கரும்பில் அதிகமான மகசூல் எடுக்க தேவையான யுக்திகள், கரும்பு நாற்றுகள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்ப முறைகள் மற்றும் கரும்பு விவசாயத்தில் கடைபிடிக்க வேண்டிய நேர்த்திகள் போன்றவை குறித்தும் இக்கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.கரும்பு விவசாயிகள் பேசியதாவது:சமீப காலமாக கரும்பு சாகுபடி குறைந்து வருவதற்கான கராணங்கள் குறித்து அவர்கள் எடுத்துரைத்தனர். வெட்டுக்கூலி அதிகரிப்பு, கட்டுப்பாடியாகாத கரும்பு விலை, காட்டுப் பன்றிகள் தொந்தரவு போன்றவை குறித்தும், இதனால் கரும்பு விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விரிவாக பேசினர்.விவசாயிகளது கருத்துக்களை பதிவு செய்துக்கொண்ட ஆலை நிர்வாகத்தினர், அவை குறித்து அரசு கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். உத்திரமேரூர் கோட்டம் கரும்பு அலுவலர் வசந்தகுமார் நன்றி கூறினார்.