சிறுவள்ளூர் ஏரியில் மண் அள்ளுவதை கண்காணிக்க விவசாயிகள் கோரிக்கை
காஞ்சிபுரம்,:அளவுக்கு அதிகமான ஆழத்தில், ஏரிகளில் மண் அள்ளுவதை தடுக்கும் வகையில், நீர்வள ஆதாரத் துறையினர் கண்காணிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை - பெங்களூரு இடையே, தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில், நான்குவழிச் சாலை உள்ளது. இச்சாலையை, ஆறுவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இதில், ஆரியபெரும்பாக்கம், கீழம்பி மேம்பால பணிகளுக்கு, கீழம்பி ஏரி மண் எடுத்து பயன்படுத்தி, மேம்பாலங்கள் கட்டும் பணியை நிறைவு செய்துள்ளனர். தற்போது, பொன்னேரிக்கரை மேம்பாலம் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது. இந்த பாலப் பணிக்கு, ஆண்டி சிறுவள்ளூர் ஏரி மண்ணை எடுத்து வந்து, மேம்பாலம் உயர்த்தும் பணியை தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் செய்து வருகின்றனர். இருப்பினும், ஏரிகளில் அளவுக்கு அதிகமான ஆழத்தில் மண் எடுப்பதை தடுக்க, நீர்வளத் துறையினர் கண்காணிக்க வேண்டும் என, விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, காஞ்சிபுரம் நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நிர்ணயம் செய்த அளவுக்கு மட்டுமே மண்ணை அள்ள வேண்டும். மீறினால் மண் அள்ளுவது நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளோம்' என்றார்.