| ADDED : நவ 24, 2025 02:26 AM
உத்திரமேரூர்: சிறுதாமூர் ஏரியை துார்வாரி சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் தாலுகா, சிறுதாமூரில் நீர்வளத் துறைக்கு சொந்தமான, 150 ஏக்கர் பரப்பளவிலான பெரிய ஏரி உள்ளது. மழை நேரங்களில் ஏரி நிரம்பினால், 220 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெருகின்றன. தற்போது, ஏரி முறையாக பராமரிப்பு இல்லாமலும், நீர்ப்பிடிப்பு பகுதி மண்ணால் துாந்தும், செடிகள் முளைத்தும் உள்ளன. இதனால், மழை நேரங்களில் போதுமான அளவு தண்ணீர் சேகரமாகாமல், உபரிநீர் விரைவாக வெளியேறி வருகிறது. குறைந்த அளவிலான தண்ணீர் சேகரமாவதால், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இந்த ஏரிக்கு நீர்வரத்து கால்வாய் வசதி இல்லாததால், மழையின்போது மட்டுமே தண்ணீரை சேமிக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, சிறுதாமூர் ஏரியை துார்வார, நீர்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.