உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உள்ளாவூர் ஏரியில் விதிகளை மீறி மண் குவாரி கலெக்டரிடம் விவசாயிகள் புகார் மனு

உள்ளாவூர் ஏரியில் விதிகளை மீறி மண் குவாரி கலெக்டரிடம் விவசாயிகள் புகார் மனு

வாலாஜாபாத்:உள்ளாவூர் ஏரியில் இயங்கும் மண் குவாரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக மண் அள்ளுவதாகவும், மண் லாரிகள் செல்ல ஏரிக்கரையை சேதப்படுத்தி உள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள், காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளித்தனர். வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது உள்ளாவூர் கிராமம். இந்த ஏரியில் சாதாரண மண் வெட்டி எடுக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்ளாவூர் ஏரியில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களுடன் மற்ற இடங்களிலும் விதிமீறி மண் அள்ளுவதாக அப்பகுதி மக்கள், விவசாயிகள், கலெக்டரிடம் நேற்றுமுன்தினம் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுஅளித்தனர். மனு விபரம்: உள்ளாவூர் ஏரியில் 3 அடி ஆழத்திற்கு மட்டுமே மண் எடுக்க வேண்டும். ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக (10 அடிக்கும் மேலாக) மண் தோண்டி எடுக்கப்படுகிறது. போலியாக பில் தயாரித்து சட்ட விரோதமாக தினசரி 1,000 லோடுக்கு மண் ஏற்றிச் செல்லப்படுகிறது. மண் லாரிகள் செல்ல வசதியாக பாதை ஏற்படுத்த ஏரிக்கரையின் ஒரு பகுதி உடைக்கப்பட்டுள்ளது. இதனால், மழைக்காலத்தில் ஏரி பலவீனம் அடையும் நிலை உள்ளது. மேலும், மண் குவாரி லாரிகள் பள்ளி நேரங்களில் தொள்ளாழி, பழையசீவரம் உள்ளிட்ட கிராம சாலைகளில் ஒரு கி.மீ., அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பல்வேறு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் உள்ளாவூர் மண் குவாரிக்கான உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை