பசுந்தாள் உர விதை பெற விவசாயிகளுக்கு அழைப்பு
உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு ஒரு கிலோ 62.50 ரூபாய் மானியத்தில் பசுந்தாள் உர விதைகள் வினியோகம் செய்யப்பட உள்ளது.இது குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் முத்துலட்சுமி கூறியதாவது: உத்திரமேரூர் வட்டாரத்தில், விவசாயிகள் தொடர்ந்து ஒரே பயிரை சாகுபடி செய்து வருவதால், மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகிறது. பயிர் மகசூல் அதிகரிக்க ரசாயன உரங்கள் மற்றும் களைக்கொல்லிகளை பயன்படுத்துவதால், மண்ணிலுள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை குறைகிறது.இதை தவிர்க்க, உத்திரமேரூர் வட்டாரத்தில் 24 டன் பசுந்தாள் உர விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 20 கிலோ பசுந்தாள் உர விதைகள் 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. பசுந்தாள் உர விதைகளை, உத்திரமேரூர் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் சென்று விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.