நகை, பயிர்கடன் பெற முடியாமல் விவசாயிகள்...தவிப்பு! :தென்னேரி கூட்டுறவு கடன் சங்கம் முடக்கம்?
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் தென்னேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், ஏழு ஆண்டுகளாக வரவு செலவு தணிக்கை செய்யப்படாமல் உள்ளதால், 22 கிராமங்களில் உள்ள, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன்கள் பெற முடியாத நிலை உள்ளது. காஞ்சிபுரம் அடுத்த, தென்னேரி கிராமத்தில், நீர் வளத்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது.இந்த ஏரி நீர் பாசனத்தை நம்பி, 5,858 ஏக்கர் நிலங்களில், தென்னேரி, மட விளாகம், அகரம், அயிமிச்சேரி, திருவாங்கரணை, நாவிட்டான்குளம் உள்ளிட்ட 22 கிராமங்களைச்சேர்ந்த, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நவரை மற்றும் சொர்ணவாரி ஆகிய இரு பருவங்களில், நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.விவசாயிகளின் நலன் கருதி, தென்னேரி கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த கூட்டுறவு சங்கம், விவசாயிகளுக்கு பயிர், நகை உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கி வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக, தென்னேரி கூட்டுறவு கடன் சங்கத்தில், பயிர் கடன், நகை கடன் உள்ளிட்ட பல்வேறு விதமான கடன்கள் வழங்கப்படுவதில்லை. உதாரணமாக, விவசாயி ஒருவர் நெல் சாகுபடி செய்யும் போது, உரம் வாங்கவும், உழவு கூலி வழங்குவதற்கும் அவசரத்திற்கு கூட்டுறவு கடன் சங்கத்தில் சென்று நகை கடன் பெற்று, விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன் வழங்குவதில்லை. மேலும் கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாளர்கள் சரியாக இருப்பதில்லை என, பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதனால், விவசாயிகள் நகை கடன் பெற தனியார் அடகு கடைகளை நாட வேண்டி உள்ளது.இதுகுறித்து, தென்னேரி விவசாயிகள் கூறியதாவது:தென்னேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன், பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு விதமான கடன்கள் பெற சென்றால், செயலர் இருப்பதில்லை. எப்போதும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் பூட்டிவைக்கப்பட்டு உள்ளது. சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூட்டுறவு சங்கத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, கூட்டுறவு சங்க செயலாட்சியர் கூறியதாவது: தென்னேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், ஐந்து பணியிடங்கள் உள்ளன. இதில், ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். மீத பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்த கூட்டுறவு கடன் சங்கத்திற்கு, கூடுதல் பொறுப்பு அலுவலரை நியமித்தாலும், வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வரும்படி உள்ளது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.கடந்த, 2017 ஆண்டு முதல் கூட்டுறவு சங்க கணக்கு பதிவேடுகளை தணிக்கை செய்யவில்லை. தணிக்கை செய்ய படிவம்-19 சமர்ப்பித்துள்ளோம். வரவு, செலவு கணக்கு தணிக்கை நிறைவு செய்த பிறகு, நகை கடன், பயிர் கடன் உள்ளிட்ட பல விதமான கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கூடுதல் பணியாளர்கள் நியமித்து சங்கம் முழு நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.