இ.கே.ஒய்.சி., பதிவு செய்யாத விவசாயிகளுக்கு 19வது தவணை தொகை கிடைப்பதில் சிக்கல்
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்டத்தில், இ.கே.ஒய்.சி., என, அழைக்கப்படும் இணைய பதிவை 1,755 விவசாயிகள் பதிவு செய்யாததால், பி.எம்.கிசான் பிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பதிவு செய்யாத விவசாயிகளுக்கு வேளாண்மை துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், 1.50 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இதில், நெல், காய்கறி உள்ளிட்ட பல வித பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.மத்திய அரசின், பி.எம். கிசான் பிரதமரின் கவுரவ உதவித்தொகை, மானிய அடிப்படையில் சொட்டு நீர் பாசனம், விவசாய உபகரணங்களை விவசாயிகளுக்கு வழங்கி அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த சலுகைகள், தகுதியான விவசாயிகளுக்கு சென்றடையும் வகை மற்றும் போலி விவசாயிகளை களையெடுக்கும் வகையில் விவசாயிகளின் நிலம் சம்மந்தப்பட்ட ஆவணங்களை இ.கே.ஒய்.சி., என, அழைக்கப்படும் பதிவை இணைய வழியில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு முன், வருடத்திற்கு 6,000 ரூபாய் வீதம், மூன்று தவணைகளாக 2,000 ரூபாய் வீதம் இதுவரை 18 தவணைகளாக விவசாயிகள் கணக்கில் 36,000 ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 24 ஆயிரத்து 500 நபர்கள் மத்திய அரசின் கவுரவ ஊக்கத்தொகை பெற தகுதி உடையவர்களாக உள்ளனர். இதில், 1,755 பயனாளிகள் இ.கே.ஒய்.சி., பதிவு செய்யவில்லை. வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை, 1,441 விவசாயிகள் இணைக்கப்படாமல் உள்ளனர். இது விவசாயிகளுக்கு 19வது தவணை தொகை கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தும். இதை தவிர்க்க, டிச.,31ம் தேதிக்குள் இணைத்தால் மட்டுமே, ஊக்க தொகை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கும் என, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெரும்பாலான விவசாயிகள் வங்கி கணக்கு துவக்கும் போது, ஒரு மொபைல்போன் நம்பர் கொடுத்து உள்ளனர். தற்போது, புதிய மொபைல் எண்ணை உபயோகப்படுத்துகின்றனர். இதனால் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைக்க முடியவில்லை. இ.கே.ஒய்.சி., விபரமும் இணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என, உதவி வேளாண்மை அலுவலர்கள் தெரிவித்தனர்.காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முருகன் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,755 நபர்கள் இ.கே.ஒய்.சி., மற்றும் 1,441 நபர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கவில்லை. இவர்களுக்கு, மத்திய அரசின் நிதி நிறுத்தப்படும் சூழல் உள்ளது.இதை தவிர்க்க, அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள், பொது சேவை மையங்களில் சென்று பி.எம்., கிசான் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
உத்திரமேரூரில் அதிகம்
தாலுகா/ இ.கே.ஒய்.சி., பதியாதவர்கள் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைக்காதவர்கள் காஞ்சிபுரம்/ 311/ 237வாலாஜாபாத்/ 363/ 261உத்திரமேரூர்/ 680/ 506ஸ்ரீபெரும்புதுார்/ 309/ 272குன்றத்துார்/ 92/ 165மொத்தம்/ 1755/ 1441
யாருக்கு கிடைக்கும்
மத்திய அரசு, 2019 முதல் விவசாயிகளுக்கு பிரதமரின் கவுரவ உதவித்தொகை வழங்கி வருகிறது. திட்டம் துவக்கத்தில், குறைந்தபட்சம் 1 ஏக்கர் நிலம் இருக்கும் சிறு, குறு மற்றும் 5 ஏக்கர் நிலம் உள்ள பெரு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. ஒரு குடும்பத்தில் எத்தனை நபர்கள் மீது விவசாய நிலம் உள்ளதோ அனைவருக்கும் வழங்கப்பட்டது.தற்போது, குறைந்தபட்சம் 24 சென்ட் நிலம் இருந்தால் போதும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு விவசாயி மட்டுமே பயன்பெற முடியும். இதற்கு, இ.கே.ஒய்.சி., இணைய பதிவு மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் அட்டை இணைக்க வேண்டும்.