உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பள்ளி மாணவரை மிரட்டி பணம், நகை பறித்த சக மாணவர்கள்

பள்ளி மாணவரை மிரட்டி பணம், நகை பறித்த சக மாணவர்கள்

ஸ்ரீபெரும்புதுார்: சுங்குவார்சத்திரம் அருகே, தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவரை மிரட்டி, சக மாணவர்கள் 1.5 லட்சம் ரூபாய் மற்றும் நகை பறித்ததுடன், மீண்டும் பணம் கேட்டு மிரட்டி, பள்ளி பேருந்திலே பிளேடால் கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுவன், சுங்குவார்சத்திரம் அருகே சந்தவேலுாரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் இருவர், 10ம் வகுப்பு மாணவருடன் பள்ளி பேருந்தில் செல்லும் போது, அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி 1.5 லட்சம் ரூபாய், 1.5 கிராம் தங்க பிரேஸ்லெட் உள்ளிட்டவைகளை பெற்றுள்ளனர். இந்த நிலையில், நவ., 4ம் தேதி, அதே போல, மூவர் பள்ளி பேருந்தில் வீட்டிற்கு செல்லும் போது, பிளஸ் 2 மாணவர்கள் இருவரும், அம்மாணவரை பெல்டால் தாக்கி, பாக்கெட்டில் வைத்திருந்த பிளேடால் கையில் கிழித்து உள்ளனர். இதில், அந்த மாணவரின் இரண்டு கைகளிலும் காயம் ஏற்பட்டது. இது குறித்து அந்த மாணவர், பெற்றோரிடம் தெரிவிக்க, அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின், இது குறித்து நேற்று முன்தினம் சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் வழக்கு பதிந்து, மாணவர்கள் இருவரையும் கைது செய்தனர். பின், அவர்களை அய்யம்பேட்டையில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற ஜாமினில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை