உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடரும் அவலம்

வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடரும் அவலம்

சிங்கபெருமாள் கோவில் -- பாலுார் சாலை, 10 கி.மீ., நீளம் கொண்டது. இந்த சாலை, காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலையாக உள்ளது. இச்சாலை வழியாக 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.வெண்பாக்கம் - ரெட்டிபாளையம் இடையே, தென்னேரி ஏரி உபரி நீர் மற்றும் 20க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபரி நீர் செல்லும் நீஞ்சல் மடுவு கால்வாய் உள்ளது. ஒவ்வொரு ஆண்டு மழைக்காலத்தில், இந்த தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்படுவது வழக்கம்.இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக, தரைப்பாலம் முழ்கியது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, செங்கல்பட்டு, ஒரகடம் வழியாக சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:ரெட்டிப்பாளையம் -- வெண்பாக்கம் இடையே, 78 லட்சம் ரூபாயில், 9 மீட்டர் நீளம் இருந்த தரைப்பாலம், தற்போது 24 மீட்டராக அகலப்படுத்தப்பட்டு உள்ளது.இந்த பகுதியில், பூமிக்கடியில் பெரிய பாறைகள் உள்ளதால், மேம்பாலம் அமைப்பது குறித்து வரும் காலங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் மின்வாரிய அலுவலகங்களுக்கு உட்பட்ட பல இடங்களில் மின் தடை ஏற்பட்டு, பகுதிவாசிகள் கடும் அவதியடைந்தனர். சீரமைப்பு பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். -- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !