உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வேகவதி ஆற்றங்கரையோர வீடுகளுக்கு வெள்ள... அபாயம்:10 ஆண்டாகியும் ஆக்கிரமிப்பு அகற்றாமல் அலட்சியம்

வேகவதி ஆற்றங்கரையோர வீடுகளுக்கு வெள்ள... அபாயம்:10 ஆண்டாகியும் ஆக்கிரமிப்பு அகற்றாமல் அலட்சியம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வேகவதி ஆற்றின் கரைகளில் உள்ள 1,400க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை, இந்தாண்டும் அகற்றாமல், மாவட்ட நிர்வாகம் அமைதி காத்து வருகிறது. இதனால், அடுத்து வரக்கூடிய வடகிழக்கு பருவமழை சமயத்தில், 500 வீடுகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. பாலாற்றின் கிளை ஆறான வேகவதி ஆறு, பனப்பாக்கம் அருகே பாலாற்றில் இருந்து பிரிந்து, காஞ்சிபுரம் நகரை கடந்து, தாங்கி கிராமத்தில் மீண்டும் பாலாற்றுடன் இணைகிறது. இதில் நகர்ப்புறத்தில் பாயும் 5 கி.மீ.,க்கு, வேகவதி ஆறு முழுதும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளது. தவிர அருகில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் திறந்து விடுவது, சாய கழிவுகள் விடுவது என, ஆறு மாசடைகிறது. ஆற்றை ஒட்டிய இடங்களில், 1,400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மட்டுமின்றி, வணிக வளாகம், மரம் அறுக்கும் ஆலை என, வணிக ரீதியிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றை அகற்ற வேண்டிய வருவாய் துறை, நீர்வள ஆதாரத்துறை உள்ளிட்ட அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலேயே உள்ளன. தாமதம் ஆக்கிரமிப்பாளர்களுக்காக, 200 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில், மறுகுடிமயர்வு செய்ய தாமதம் ஆனதால், அந்த வீடுகளை, மற்ற பயனாளிகளுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் ஒதுக்கிவிட்டனர். இதனால், கீழ்கதிர்பூர் கிராமத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு, வேகவதி ஆக்கிரமிப்பாளர்கள் செல்லவும் இனி வழிவகை இல்லாமல் போய்விட்டது. இதனால், வேகவதி ஆக்கிரமிப்பாளர்களை மாவட்ட நிர்வாகத்தால் அகற்ற முடியாமல் உள்ளது. வெறும் 78 வீடுகள் மட்டும், 2023ல் அகற்றப்பட்டன. ஆனால், 1,000க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அப்படியே உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின்போதும் இந்த ஆக்கிரமிப்பு வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து, பலரும் பாதிக்கின்றனர். ஐந்து ஆண்டுகளாகவே தாயார்குளம், கலெக்டர் அலுவலகம் அருகிலும், காமாட்சியம்மன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளில் வெள்ள நீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆக்கிரமிப்பாளர்களை மீட்பதில், மாவட்ட நிர்வாகம், 2022, 2023ல் பெரும் சிரமப்பட்டது. அதுபோன்ற பாதிப்பு இந்தாண்டும் ஏற்படும் நிலை உள்ளது. வடகிழக்கு பருவமழை, அக்டோபர் துவங்க உள்ளது. பெருமழை பெய்யும்போதும், தாமல் ஏரி திறந்து விடப்படும். ஏரியிலிருந்து வரும் உபரி நீர், வேகவதி ஆற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும். அபாயம் இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வேகவதி ஆக்கிரமிப்பாளர்களை அங்கிருந்து அகற்ற மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டி வருகின்றனர் தி.மு.க., ஆட்சி அமைந்த உடன், 2021ல், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், இந்த ஆக்கிரமிப்புகளை நேரில் பார்வையிட்டார். அப்போது, இந்த ஆக்கிரமிப்புகள் விரைவாக அகற்றப்பட்டு, அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்றார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடிந்தும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அறிகுறியே இல்லை என, காஞ்சிபுரம் நகரவாசிகள் தெரிவிக்கின்றனர். ஆக்கிரமிப்பாளர்கள் இந்தாண்டும் வெளியேற்றப்படாமல் இருந்தால், குறைந்தபட்சம் 500 வீடுகளில் வெள்ளநீர் புகும் அபாயம் ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படும் சூழல்களும் அதிகம் உள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக, வேகவதி ஆற்றின் கரைகளில் உள்ள நுாற்றுக்கணக்கான ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அகற்றும் பணி நடக்கிறது வேகவதி ஆற்றின் ஆக்கிரமிப்புகளை தொடர்ந்து அகற்றி வருகிறோம். வேகவதி பாயும் கிராமப்புறங்களில் செங்கல் சூளைகள் மற்றும் பிற ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளோம். நகரிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. இருளர்களுக்கு பட்டா வழங்கியுள்ளோம். வேகவதி ஆற்றின் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்த பின், ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம். - ஆஷிக் அலி சப் - கலெக்டர், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை