வாலாஜாபாத் பேரூராட்சியில் குறைதீர் முகாம்
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி, 2வது வார்டில், மக்கள் குறை கேட்பு முகாம் நேற்று நடந்தது. அப்பகுதி வார்டு கவுன்சிலர் அசோக்குமார் தலைமையில் நடந்த முகாமில், பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி, துணை தலைவர் சுரேஷ்குமார், வி.ஏ.ஒ., சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மெக்ளின்புரம் பகுதியில் துவங்கிய இம்முகாம், வாலாஜாபாத் -- -ஸ்ரீபெரும்புதூர் சாலை, சின்னசாமி நகர், பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்றது.பெரியார் நகரில் பூங்கா வசதி ஏற்படுத்துதல், மெக்ளின்புரத்தில் கூடுதல் குடிநீர் ஆதாரம் ஏற்படுத்துதல், சின்னசாமி நகரில், கழிவுநீர் கால்வாய் பராமரித்து தூர்வாருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் கொண்ட மனுக்களை பகுதியினர் வழங்கினர்.பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி மனுக்கள் மீது முறையாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.