தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மலையாங்குளத்தில் அமைப்பு
உத்திரமேரூர்:மலையாங்குளம் கிராமத்தில் 12 லட்சம் ரூபாய் செலவில் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.உத்திரமேரூர் ஒன்றியம், மலையாங்குளம் ஊராட்சியில், காட்டுக்கொல்லை, அம்பேத்கர் நகர், மலையாங்குளம், நரியம்புதூர், நரியம்பாக்கம் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன.இங்கு, 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வாயிலாக, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு அங்குள்ள ஏரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, ஆழ்துளை கிணறுகளில் இருந்து பூமியில் புதைக்கப்பட்ட குழாய்கள் வாயிலாக தண்ணீர் ஏற்றப்பட்டு வருகிறது.அவ்வாறு பூமியில் புதைக்கப்பட்டுள்ள குழாய்கள் அழுத்தம் தாங்க முடியாமல், அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வந்தது. இதனால், அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்வது தடைப்பட்டு வந்தது.எனவே, தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க, ஊராட்சி நிர்வாகம் சார்பில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, 2023 --- 24ம் நிதி ஆண்டில், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 12 லட்சம் ரூபாய் செலவில், தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.