காஞ்சிபுரம்;காஞ்சி மாநகராட்சி கூட்டம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடந்தாலும், பாதி கவுன்சிலர்கள் கூட்டம் முடியும் முன் வெளியேறிவிட்டனர். எந்த தடையும் இன்றி, 74 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம், மேயர் மகாலட்சுமி தலைமையில், அண்ணா அரங்கத்தில், நேற்று, காலை 10:30 மணிக்கு நடந்தது. இதில், மாநகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியன், பொறியாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். கூட்டம் துவங்கிய உடன், தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.Galleryவார்டு சபாவில் கவுன்சிலர்கள் கேட்ட கோரிக்கைகள், செவிலிமேடு ஆரம்ப சுகாதார மையத்தை 75 லட்சம் ரூபாயில் சீரமைக்கப்பட உள்ளது, நிர்வாகம், வசதிகள், அடிப்படை தேவைகள் என, பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, 74 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.எந்த தீர்மானத்திற்கும், ஆட்சேபனை இல்லாததால், அனைத்து தீர்மானங்களும் நிறைவேறின.ஆனால், மாநகராட்சி கூட்டம் நடக்கும்போதே, கவுன்சிலர்கள் பலரும், கூட்டரங்கிலிருந்து எழுந்து வீட்டிற்கு சென்றனர்.கூட்டம் துவங்கிய உடன், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட கவுன்சிலர்கள் பலரும், டீ குடித்துவிட்டு, ஒவ்வொருவராக புறப்பட்டனர்.மாநகராட்சியின், 51 கவுன்சிலர்களில், பாதி பேர், அடுத்தடுத்து புறப்பட்டனர். சிலர் தங்கள் வார்டு பிரச்னையை பேசிவிட்டு உடனடியாக சென்றனர். சில கவுன்சிலர்கள் எதுவும் பேசாமலேயே புறப்பட்டனர்.இரண்டு மாதங்களுக்கு பின் நடக்கும் கூட்டத்தில், இரண்டு மணி நேரம்கூட அமர முடியாமல் கவுன்சிலர்கள் எழுந்து சென்றது, பார்வையாளர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது. ஒரு மணி நேரத்திலேயே, கூட்டரங்கில் உள்ள நாற்காலிகள் பாதி காலியாகிவிட்டன.மீதமுள்ள கவுன்சிலர்கள் தங்களது வார்டு பிரச்னைகளை பேசிவிட்டு கூட்டம் முடிந்த பின் சென்றனர். கவுன்சிலர்களால், இரண்டு மணி நேர கூட்டத்தில் முழுமையாக அமர முடியாமல், பெயரளவுக்கு பங்கேற்றது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:சிந்தன், அ.தி.மு.க.,: 44வது வார்டில் சதாசிவம் நகரில் உள்ள கால்வாயை துார்த்துவிட்டு, அருகில் உள்ள இடத்தில், 5 அடியில் கால்வாய் அமைத்துள்ளனர். ஏற்கனவே இதுபற்றி புகார் அளித்துவிட்டேன். ஆனால் கால்வாயை மீட்க நடவடிக்கை இல்லை.பாலசுப்ரமணியன், கமிஷனர்: அந்த கால்வாய் இருக்கும் இடம் பட்டா இடம். உங்களுக்கு, நில ஆவணங்களை நான் தருகிறேன்.சண்முகானந்தம், அ.தி.மு.க., : 11வது வார்டில் உள்ள பணியாளர்கள் சரியாக பணியாற்றுவதில்லை. இதனால், குடிநீர் குழாய் உடைந்து, மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுகிறது. எங்கள் வார்டில், 60 கிராமங்களுக்கு செல்லும் சாலை உள்ளது. குடிநீர் குழாய் அடிக்கடி உடைவதால், 60 கிராமங்களுக்கு செல்லும் பாதை தடைபடுகிறது. பணியாளர்களை மாற்றுங்கள்.பாலசுப்ரமணியன், கமிஷனர்: ஆய்வு செய்து அங்கு பணியாளர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.குமரகுருநாதன், துணை மேயர்: குப்பை கிடங்கு முழுதும் குப்பையால் நிரம்பிவிட்டது. 22வது வார்டு முழுதும் குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது.சுகவனம், சுகாதார அலுவலர்: குப்பையை குறைக்க நடவடிக்கை எடுக்கிறோம்.குமரவேல், தி.மு.க., : அண்ணா நுாற்றாண்டு பூங்காவில், சமூக விரோத வேலைகள் நடக்கின்றன. அங்குள்ள கழிப்பறை இன்னும் திறக்காமல் உள்ளது. பார்க்கிங் இடமாகவும் மாறிவி ட்டது.பாலசுப்ரமணியன், கமிஷனர்: பூங்காவில் உள்ள கழிப்பறை 1ம் தேதி முதல் செயல்படும். புறநகர் காவல் நிலையம் ஒன்றையும் நாங்கள் கேட்டுள்ளோம்.சுரேஷ், தி.மு.க., : மாநகராட்சியில் உள்ள மாடுகளையும், நாய்களையும் பிடிக்க வேண்டும்.பாலசுப்ரமணியன், கமிஷனர்: மாடுகளை பிடிப்பதில் உங்கள் ஒத்துழைப்பு வேண்டும். அதேபோல், நாய்களுக்கு கருத்தடை செய்ய நீதிமன்றத்தில் இருந்த 'ஸ்டே' நீங்கியுள் ளது. விரைவில், நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்படும்.
பா.ஜ.,வுக்கு எதிராகதி.மு.க., வாக்குவாதம்
காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில், 21வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் விஜிலா, ''மாநகராட்சி நிர்வாகத்தில் எந்த பணியும் சரியாக நடக்கவில்லை. அதிகாரிகள் அலட்சியமாக இருக்கின்றனர்,'' என, அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டினார். உடனடியாக, மேயர் மகாலட்சுமி, ''உங்கள் வார்டில் என்ன பணிகள் நடந்துள்ளன என்ற பட்டியலை தருகிறேன்,' என்றார். அதற்கு, 'நான் மாநகராட்சி முழுதும் தான் குற்றஞ்சாட்டுகிறேன்; நகர் முழுதும் எந்த பணியும் சரிவர நடக்கவில்லை' என, கவுன்சிலர் விஜிலா கூறினார். உடனடியாக, 30வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சுரேஷ், 'மற்ற வார்டு பிரச்னைகளை நீங்கள் கூற கூடாது; அது உங்கள் வேலை இல்லை' என்று, வாக்குவாதம் செய்தார். அவருடன் சேர்ந்து மேலும் இரு கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்ததால், கூட்டரங்கு பரபரப்பானது. இதையடுத்து, பா.ஜ., கவுன்சிலர் விஜிலா, கூட்டத்திலிருந்து வெளியேறினார்.