ஸ்ரீபெரும்புதுாரில் கன மழை
ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் நேற்று முதல், மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதே போல, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவித்தது. அதன் படி, சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்தரம், ஒரகடம், படப்பை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 3:30 மணி முதல், இடியுடன் கூடிய கன மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். சில தினங்களாக பகலில் கொளுத்தும் வெயிலும், மாலையில் மழையும் பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.