கனவு இல்ல பயனாளிகள் 709 பேருக்கு வீடு கட்ட பணி ஆணை வழங்கல்
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்தில் 61 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், குடிசை வீடுகளில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 2025 - 26ம் ஆண்டுக்கான, 'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்க பயனாளிகள் தேர்வு செய்யும் பணி வருவாய்த் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.அதன்படி, முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட, 709 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வாலாஜாபாதில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன் ஆகியோர் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கினர்.வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன், துணை தலைவர் சேகர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, பாலாஜி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பேசுகையில், ''வீடுகள் தேவை என விண்ணப்பித்து உள்ளவர்களுக்கும், விடுபட்டவர்களுக்கும் அடுத்தடுத்து வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வரப்படுகிறது. தற்போது பணி ஆணை பெற்ற பயனாளிகள், உடனடியாக பணியை துவக்கி, விரைவாக முடிக்க வேண்டும்,'' என்றார்.